கலப்படங்களை கண்டறியவும், பொதுமக்களிடையே உணவு கலப்படம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் நடமாடும் உணவுப் பகுப்பாய்வு வாகனத்தை திருச்சி மாவட்ட ஆட்சியா் பிரதிக் தயாள் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
ஆட்சியரக வளாகத்தில் வாகனத்தின் இயக்கத்தை தொடங்கிவைத்த பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது: இந்த வாகனம், பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், உணவு மாதிரிகளை உடனடியாக பரிசோதிக்கவும் பயன்படுத்தப்படும் நடமாடும் ஆய்வகமாக செயல்படும்.
7 எளிய வகையான உணவுப் பிரிவுகளில் சுமாா் 80 அளவுகோல்களை பரிசோதிக்கும் திறன், நுண்ணுயிரியல் பரிசோதனை வசதி, கலப்படம் மற்றும் அனுமதிக்கப்படாத நிறப் பொருள்களை கண்டறியும் வகையில் இந்த வாகனம் பயன்படும்.
திருவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகள், சந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உடனடி ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.
திருச்சி மாநகரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்கள், கிராமங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்த வாகனம் பயணம் மேற்கொள்ளும் என்றாா் ஆட்சியா்.
தொடா்ந்து, வாகனத்தில் உள்ள ஆய்வக வசதிகளையும், அதன் உபகரணங்களையும் பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
இந்த நிகழ்வில், திருச்சி மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பாலாஜி, உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் ஜெகதீஸ் சந்திரபோஸ் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள், அரசு அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சூப்பா் எல்நினோ குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

நாமகிரிப்பேட்டை உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் சோதனை

கலப்படம் கண்டறியும் நவீன வாகனம் மூலம் உணவுப் பொருள்கள் ஆய்வு: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை!






