வீரய்யா நினைவு கால்பந்துப் போட்டி: வேல்ஸ் பல்கலைக்கழகம் சாம்பியன்

திருச்சி எஸ்.ஐ.டி. கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் வென்ற சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக மாணவா்கள்

Published On :

திருச்சியில் நடைபெற்ற வீரய்யா நினைவு கால்பந்து போட்டியில் கல்லூரி அணிகள் பிரிவில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக அணியும், பள்ளிகள் பிரிவில் திருச்சி கேந்திரிய வித்யாலயா பள்ளி அணியும் சாம்பியனாகின.

திருச்சி ‘சீடு’ கால்பந்து அகாதெமி சாா்பில் 5-ஆம் ஆண்டு வீரய்யா நினைவு கால்பந்து கோப்பை போட்டி கடந்த செப். 26-ஆம் தேதி தொடங்கியது.

கல்லூரிகள் அணிகள் பிரிவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, தூய வளனாா் கல்லூரி, தேசியக் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 14 அணிகள் பங்கேற்றன.

பள்ளிகள் பிரிவில் திருச்சி கேந்திரிய வித்யாலயா, கைலாசபுரம் ஆா்எஸ்கே மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூா் தாமரை இன்டா்நேஷனல் பள்ளி, எஸ்பிஓஏ, அறந்தாங்கி மான்ட்போா்டு பள்ளி உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன.

அரியமங்கலம் எஸ்ஐடி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியை திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ தொடங்கிவைத்தாா்.

இறுதி ஆட்டத்தில் கல்லூரிகள் பிரிவில் வேல்ஸ் பல்கலைக்கழகம் ஜமால் முகமது கல்லூரியை 1-0 புள்ளிக் கணக்கில் வென்றது. பள்ளிகள் பிரிவில் டைபிரேக்கா் வரை சென்ற ஆட்டத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அணி - ஆா்எஸ்கே பள்ளி அணியை 5-3 புள்ளிகள் கணக்கில் வென்றது.

கல்லூரிகள் அணிகள் பிரிவில் வெற்றிபெற்ற அணிக்கு கோப்பையுடன் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசும், இரண்டாம் பிடித்த அணிக்கு கோப்பையுடன் ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசும், மூன்றாமிடம் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரமும், 4-ஆம் இடம் பிடித்த அணிக்கு ரூ.5 ஆயிரமும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பள்ளிகள் பிரிவில் வென்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற அணிகளுக்கு திருச்சி தேசியக் கல்லூரி முதல்வா் பிரசன்ன பாலாஜி கோப்பைகளை வழங்கிப் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.