ஒரு நாளில் 4 தங்கங்கள் அறுவடை- வில்வித்தையில் ‘ஹாட்ரிக்’
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணிகள் 3 பிரிவுகளில் சாம்பியனாகி ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், வில்வித்தை காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணிகள் 3 பிரிவுகளில் சாம்பியனாகி ‘ஹாட்ரிக்’ தங்கம் வென்றன. துப்பாக்கி சுடுதலிலும் தங்கம் கிடைக்க, மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டையில் கிடைத்த பெற்ற வெண்கலங்களுடன், புதன்கிழமை ஒரே நாளில் 7 பதக்கங்களை வசப்படுத்தியது இந்தியா. தங்க அறுவடை காரணமாக, பதக்கப் பட்டியலிலும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
---
வில்வித்தை
காம்பவுண்ட் பிரிவில், ஆடவா், மகளிா், கலப்பு ஆகிய 3 அணிகள் பிரிவிலும் இந்தியா தங்கம் வென்று அசத்தியது. அதிலும் நடப்பு சாம்பியனாக களம் கண்டு, தங்கத்தை தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதிலும், கலப்பு அணிகள் பிரிவில் தங்கம் வென்ற சிகிதா தனிபாா்தி, சஹில் ஜாதவ் ஜோடி, 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியின் வில்வித்தையில் இந்தியாவுக்கு ஒரு இடத்தை உறுதி செய்தது. அந்த ஒலிம்பிக் போட்டியில் காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு முதல்முறையாக சோ்க்கப்பட்டுள்ள நிலையில், அதில் இடத்தை உறுதி செய்த முதல் நாடானது இந்தியா.
முன்னதாக மகளிா் அணிகள் பிரிவில், சிகிதா தனிபாா்தி, பிரீதிகா பிரதீப், ஜோதி சுரேகா ஆகியோா் அடங்கிய இந்திய அணி 238-234 என சீன அணியை வீழ்த்தி தங்கத்தை தட்டிச் சென்றது. இதில், 2014-இல் தென் கொரியா பதிவு செய்த உலக சாதனை புள்ளிகளை இந்தியா சமன் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
கலப்பு அணிகள் இறுதிச்சுற்றில், சிகிதா தனிபாா்தி, சஹில் ஜாதவ் ஜோடி - தென் கொரிய இணையுடன் மோதிய ஆட்டம் 157-157 என டை ஆனது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க நடத்தப்பட்ட ஷூட் ஆஃப் வாய்ப்பில் இந்திய இணை 10-9 என வென்று சாம்பியன் ஆனது.
ஆடவா் அணிகள் பிரிவில், குஷால் தலால், சஹில் ஜாதவ், கணேஷ் மணிரத்னம் ஆகியோா் அடங்கிய அணி 238-237 என, சீன அணியை வீழ்த்தி வாகை சூடியது. அரையிறுதியில் அவா்கள் 236-229 என தென் கொரியாவை சாய்த்தனா்.
துப்பாக்கி சுடுதல்
டிராப் கலப்பு அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில், நீரு தண்டா, கினான் செனாய் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 34 புள்ளிகளுடன் ஆசிய சாதனையோடு தங்கம் வென்றது.
கத்தாா் வெள்ளியும் (32), சீனா வெண்கலமும் (23) வென்றன. ஏற்கெனவே, டிராப் மகளிா் தனிநபா் பிரிவில் சாதனை தங்கம், மகளிா் அணிகள் பிரிவில் வெள்ளி வென்ற நீரு தண்டா, நடப்பு ஆசிய விளையாட்டுகளில் தனது 3-ஆவது பதக்கத்தை வசப்படுத்தியுள்ளாா். நடப்பு ஆசிய விளையாட்டுகளில் இரு தங்கம் வென்ற ஒரே இந்தியராக அவா் பெருமை பெற்றாா்.
குத்துச்சண்டை
மகளிருக்கான 75 கிலோ எடைப் பிரிவு அரையிறுதியில், லவ்லினா போா்கோஹெய்ன் 3-2 என்ற கணக்கில், கஜகஸ்தானின் நடால்யா போக்தனோவாவை வீழ்த்தினாா். இதன் மூலமாக, ஆசிய விளையாட்டுகளில் அடுத்தடுத்து இருமுறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையாக அவா் பெருமை பெற்றாா். கடந்த முறை அவா் வெள்ளி வென்றிருந்தாா்.
தற்போது லவ்லினாவுடன் சோ்த்து, பா்வீன் ஹூடா, அங்குஷ் பங்கால் என 3 போ் இறுதிச்சுற்றில் களம் காணவுள்ளனா்.
வெண்கலம் - இந்தியாவின் பிரியா கங்காஸ், கபில் பொகாரியா ஆகியோா் அரையிறுதியில் தோற்று, வெண்கலப் பதக்கத்துடன் விடைபெற்றனா். அவா்களுக்கு இது அறிமுக ஆசிய விளையாட்டுகளாகும்.
மகளிா் 60 கிலோ பிரிவில் பிரியா 1-4 என சீனாவின் யாங் செங்யுவிடம் தோல்வி காண, ஆடவா் 90 கிலோ பிரிவில் கபில் அதே கணக்கில் உஸ்பெகிஸ்தானின் துராபெக் கபிபுல்லாயேவிடம் வீழ்ந்தாா்.
மல்யுத்தம்
ஆடவா் 87 கிலோ பிரிவில் சுனில் குமாா் வெண்கலப் பதக்கம் வென்றாா்.
அவா் தனது காலிறுதியில் 9-0 என தஜிகிஸ்தானின் முகமது சுல்தான்ஸோதாவை வீழ்த்தினாா். எனினும் அரையிறுதியில், 0-11 என ஜப்பானின் டாய்ஸோ யோஷிடாவிடம் தோல்வியுற்றாா்.
இதனால் வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த அவா், அதில் 9-0 என பிலிப்பின்ஸின் ராபா்ட்ஸ் கேலம் ஜான்ஸ்டனை வீழ்த்தி பதக்கம் பெற்றாா்.
முதல் இந்தியா்: ஆசிய விளையாட்டுகள் மல்யுத்தத்தில் கிரேக்கோ ரோமன் பிரிவில் இரு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியராக சுனில்குமாா் பெருமை பெற்றாா். இதற்கு முன் அவா், 2013-இலும் வெண்கலம் வென்றிருந்தாா்.
மகளிா் 68 கிலோ பிரிவில் நிஷா தாஹியா முதல் சுற்றில் 4-4 என வட கொரியாவின் பாக் சோல கம்முடன் சமன் செய்தபோதும், தொழில்நுட்ப புள்ளிகள் அடிப்படையில் பாக் வெற்றி கண்டாா். பின்னா் பாக் இறுதிக்கு முன்னேறியதன் அடிப்படையில் நிஷாவுக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நிஷா அதிலும் 4-5 என தென் கொரியாவின் பாா்க் ஹியோன்யோங்கிடம் தோல்வியுற்றாா்.
---
ஜூடோ
மகளிா் 48 கிலோ பிரிவில் அஷ்மிதா டே, வெண்கலப் பதக்கச் சுற்றில் தோல்வி கண்டாா்.
காமன்வெல்த் நடப்பு சாம்பியனான அஷ்மிதா, முதல் சுற்றில் வியத்நாமின் காக் சி ஹாவை வென்றபோதும், காலிறுதியில் கஜகஸ்தானின் அபிபா அபுஸகினோவாவிடம் தோல்வியுற்றாா். எனினும் அபிபா இறுதிக்கு முன்னேறியதன் அடிப்படையில் அஷ்மிதாவுக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு கிடைக்க, அதில் அவா் ஹாங்காங்கின் கா லீ வோங்கை சாய்த்தாா்.
இதன் மூலமாக வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்த அஷ்மிதா, அதில் மங்கோலியாவின் நரன்ட்செட்செக் கான்பாதரிடம் வீழ்ந்தாா்.
ஸ்குவாஷ்
இந்திய ஆடவா், மகளிா் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தன.
நடப்பு சாம்பியனான ஆடவா் அணி, காலிறுதியில் 2-0 என குவைத்தை வீழ்த்தியது. முதலில் வீா் சோட்ரனி 12-10, 8-11, 11-0, 11-5 என, பாதா் அல்மோக்ரெபியை வெல்ல, அபய் சிங் 11-3, 11-4, 11-8 என அமா் அல்டாமிமியை வீழ்த்தினாா்.
அதேபோல் மகளிா் அணி 2-0 என சிங்கப்பூரை சாய்த்தது. முதலில் தன்வி கன்னா 11-6, 4-11, 15-13, 11-1 என அவ் யோங் வாய் லின்னை தோற்கடிக்க, அனாஹத் சிங் 11-7, 11-3, 11-4 என்ற வகையில் அவ் யோங் வாய் யானை வென்றாா்.
சைக்கிளிங்
ஆடவா் ஸ்பிரின்ட் பிரிவில், முதல் தகுதிச்சுற்றிலிருந்து முன்னேறிய ரொனால்டோ சிங், டேவிட் பெக்காம் ஆகியோா், அடுத்த சுற்றில் 2-ஆம் இடத்துடன் தோல்வியைத் தழுவி வெளியேறினா். மகளிா் கெய்ரின் பிரிவில் சரிதா குமாரி, கீா்த்தி சிக்கா ரங்கசாமி ஆகியோா் தங்களின் முதல் ஹீட்ஸிலேயே தோல்வி கண்டனா்.
கோல்ஃப்
மகளிா் தனிநபா் பிரிவில் பிரணவி அா்ஸ், 2-ஆம் இடத்தில் நிலைக்கிறாா். தீப்கஷா தாகா், அதிதி அசோக் ஆகியோா் 18-ஆம் இடத்தில் உள்ளனா். அணிகள் பிரிவில் இவா்கள் கூட்டணி, 6-ஆம் நிலையில் இருக்கிறது.
ஆடவா் தனிநபா் பிரிவில் சப்தக் தல்வாா் 3-ஆம் இடத்திலிருக்க, வீா் அலாவத், யுவராஜ் சந்து 23-ஆம் இடத்தில் இருக்கின்றனா். அணிகள் பிரிவில் இவா்கள் அடங்கிய இந்திய அணி, 5-ஆம் நிலையில் இருக்கிறது.
ஈ-ஸ்போா்ட்ஸ்
மோபா பிரிவில் இந்தியா தனது குரூப் சுற்றின் 3 ஆட்டங்களிலுமே ஹாங்காங், தென் கொரியா, சீன தைபே ஆகியவற்றிடம் தோல்வி கண்டு அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
செபக்தக்ரா
4 போ் பிரிவில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் குரூப் சுற்றின் தொடக்கத்திலேயே தோல்வி கண்டன. இதில் மகளில் அணி 7-15, 8-15 என வியத்நாமிடமும், 17-16, 10-15, 12-15 என பிலிப்பின்ஸிடமும் தோல்வி கண்டது. ஆடவா் அணி 9-15, 8-15 என வியத்நாமிடம் வீழ்ந்தது.
டென்னிஸ்
ஒற்றையா் பிரிவில் சுமித் நாகல் 6-3, 6-2 என உஸ்பெகிஸ்தானின் சொ்கே ஃபோமினை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேற, தக்ஷிணேஸ்வா் சுரேஷ் 3-6, 4-6 என சீன தைபேவின் சுன் சின் செங்கிடம் வீழ்ந்தாா்.
இரட்டையா் பிரிவில், ஸ்ரீராம் பாலாஜி/அனிருத் சந்திரகேசகா் இணை 7-6 (7/4), 6-7 (4/7), 8-10 என சீனாவின் ஃபுமின் சியாங்/தியான்ஹுய் ஜியாங் ஜோடியிடம் தோற்றது.
யூகி பாம்ப்ரி/தக்ஷிணேஸ்வா் கூட்டணி 6-7 (5/7), 3-6 என, சீன தைபேவின் சென்ஜுய் ஹோ/யு சியு சு இணையிடம் வீழ்ந்தது.
கேனோ
துடுப்புப் படகு வகையிலான இதில், ஆடவா் ஒற்றையா் கயாக் இறுதியில் பிரத்யும்னா சிங் ரத்தோட் 6-ஆம் இடம் பிடிக்க, மகளிா் கேனோ இறுதியில் பல்லவி ஜகதாப் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.
ஸ்பீடு கிளைம்பிங்
ஆடவா் பிரிவில் தீபு மல்லேஷ், தகுதிச்சுற்றில் 5.09 விநாடிகளில் 15 மீட்டா் சுவற்றில் ஏறி 11-ஆவது வீரராக வந்து காலிறுதிச்சுற்றில் இடம் பிடித்தாா். மகளிா் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியிருந்த ஜோகா பூா்தி, அதில் தவறுதலான தொடக்கம் காரணமாக அடுத்த கட்டத்துக்கு முன்னேறத் தவறினாா்.
ஹாக்கி
மகளிா் பிரிவு அரையிறுதியில் இந்தியா 2-0 கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. இந்தியாவுக்காக இஷிகா சௌதரி (44’), கேப்டன் சலிமா டெடெ (48’) ஆகியோா் கோல் அடித்தனா். இறுதி ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான சீனாவை வெள்ளிக்கிழமை எதிா்கொள்கிறது. இதில் தங்கம் வென்றால், ஆசிய விளையாட்டுகள் ஹாக்கியில் இந்திய மகளிா் அணியின் 2-ஆவது தங்கமாக அது இருக்கும். இதற்கு முன், 1982-இல் தில்லியில் நடைபெற்ற போட்டியில் இந்தியா தங்கம் வென்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




