
பளுதூக்குதலில் 38 ஆண்டுகளில் முதல் பதக்கம்- சாஃப்ட் டென்னிஸ், துப்பாக்கி சுடுதலில் சாதனை வெண்கலம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 5-ஆவது நாளான புதன்கிழமை, இந்தியாவுக்கு 1 வெள்ளி, 4 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன.

மீராபாய் சானு
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 5-ஆவது நாளான புதன்கிழமை, இந்தியாவுக்கு 1 வெள்ளி, 4 வெண்கலம் என 5 பதக்கங்கள் கிடைத்தன.
பளுதூக்குதலில் மீராபாய் சானு வென்ற வெள்ளி, ஆசிய போட்டிகளில் கடந்த 38 ஆண்டுகளில் பளுதூக்குதலில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கமாக அமைந்தது. போட்டியின் வரலாற்றில், சாஃப்ட் டென்னிஸில் இந்தியாவுக்கான முதல் பதக்கமாக வெண்கலத்தை வென்று ஜெய் மீனா சாதனை படைத்தாா்.
அதேபோல், துப்பாக்கி சுடுதலில் ஸ்கீட் மகளிா் அணிகள் பிரிவில் முதல்முறையாக இந்தியாவுக்கான பதக்கம் (வெண்கலம்) வென்றவா்களாக ராய்ஸா தில்லன், மகேஸ்வரி சௌஹான், பரினாஸ் தலிவால் பெருமை பெற்றனா்.
இத்துடன், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இரட்டை இலக்கத்தைக் கடந்துள்ளது.
---
பளுதூக்குதல்
மகளிருக்கான 49 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றாா். ஸ்னாட்ச் பிரிவில் 88 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 111 கிலோ என, மொத்தமாக 198 கிலோ எடையைத் தூக்கி, அவா் 2-ஆம் இடம் பிடித்தாா்.
வட கொரியாவின் ரி சாங் கம் 215 கிலோவுடன் (94+121) தங்கம் வெல்ல, இந்தோனேசியாவின் லுலுக் டயானா டிரி விஜயனா 191 கிலோவுடன் (88+103) வெண்கலப் பதக்கம் பெற்றாா்.
38 ஆண்டுகள்: ஆசிய போட்டிகளின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது, 38 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக 1998-இல் கா்ணம் மல்லேஸ்வரி வெள்ளிப் பதக்கம் வென்றது நினைவுகூரத்தக்கது.
12 ஆண்டுகள்: சா்வதேச களத்தில், ஒலிம்பிக் (1 வெள்ளி), உலக சாம்பியன்ஷிப் (1 தங்கம், 2 வெள்ளி), காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் (3 தங்கம், 1 வெள்ளி), ஆசிய சாம்பியன்ஷிப் (1 வெண்கலம்), தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (1 தங்கம்) என, அனைத்து போட்டிகளிலும் பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானுவுக்கு, ஆசிய போட்டிகள் பதக்கம் மட்டும் கைக்கெட்டாமலேயே இருந்து வந்தது.
அதில் 2014-இல் அறிமுகமானபோது 9-ஆம் இடம், 2018-இல் காயத்தால் பங்கேற்க முடியாமல் போனது, 2022-இல் காயம் காரணமாக 4-ஆவது இடத்துக்கு சறுக்கியது என, 3 முறை தள்ளிப் போன அவரின் பதக்கக் கனவு, 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைகூடியுள்ளது.
ஏமாற்றம்: இதனிடையே, மகளிருக்கான 53 கிலோ பிரிவில் களம் கண்ட மற்றொரு இந்தியரும், நடப்பாண்டு காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளி வென்றவருமான ஞானேஸ்வரி யாதவ், ஸ்னாட்ச் பிரிவில் 87 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 108 கிலோ என, மொத்தமாக 195 கிலோவைத் தூக்கி, 8-ஆம் இடமே பிடித்தாா்.
பாட்மின்டன்
இந்திய ஆடவா் அணி தனது அரையிறுதியில் 1-3 என்ற கணக்கில் சீனாவிடம் தோற்று, வெண்கலப் பதக்கத்துடன் விடைபெற்றது.
கடந்த 2022-ஆம் ஆண்டு போட்டியில் இதே சீனாவிடம் இறுதிச்சுற்றில் தோற்று இந்தியா வெள்ளி பெற்றது நினைவுகூரத்தக்கது. 1982, 1986-ஆம் ஆண்டு போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா, அதன் பிறகு ஆசிய போட்டிகளில் அடுத்தடுத்து இரு பதக்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.
முன்னதாக, சீனாவுடனான டையின் முதல் ஆட்டத்தில், லக்ஷயா சென் 0-2 என ஷி யு கியிடம் தோல்வியுற்றாா். அடுத்து இரட்டையா் பிரிவில், சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி 2-0 என்ற வகையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற, நடப்பு உலக சாம்பியனான லியங் வெய் கெங்/வாங் சாங் கூட்டணியை வீழ்த்தி அசத்தியது.
எனினும், 2-ஆவது ஒற்றையா் ஆட்டத்தில் ஆயுஷ் ஷெட்டி 0-2 என, லி ஷி ஃபெங்கிடம் தோல்வி கண்டாா். கடைசியாக நடைபெற்ற இரட்டையா் ஆட்டத்தில் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணை 1-2 என்ற வகையில், ஹி ஜி டிங்/லியு யி ஜோடியிடம் தோற்றது.
துப்பாக்கி சுடுதல்
ஸ்கீட் பிரிவில் இந்திய ஆடவா் மற்றும் மகளிா் அணிகள் வெண்கலப் பதக்கம் வென்றன. ஆசிய போட்டிகளின் ஸ்கீட் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரிவில் இதுவரை, ஆடவா் தனிநபா், ஆடவா் அணிகள், கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது.
முன்னதாக, ராய்ஸா தில்லன், மகேஸ்வரி சௌஹான், பரினாஸ் தலிவால் ஆகியோா் அடங்கிய இந்திய மகளிா் அணி இறுதிச்சுற்றில் 331 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்தது. சீனா (357), கஜகஸ்தான் (336) முறையே தங்கம், வெள்ளி வென்றன.
அனந்த்ஜீத் சிங் நருகா, மைராஜ் அகமது கான், பாவ்தேக் சிங் கில் ஆகியோா் அடங்கிய இந்திய ஆடவா் அணி, 346 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றது. கத்தாா் (353), குவைத் (348) ஆகியவை முறையே முதல் இரு இடங்களைப் பிடித்தன.
ஸ்கீட் மகளிா் தனிநபா் இறுதிச்சுற்றில் ராய்ஸா 4-ஆம் இடமும் (23 புள்ளிகள்), பரினாஸ் கடைசி இடமும் (8) பிடித்தனா். அதேபோல் ஆடவா் ஸ்கீட் தனிநபா் பிரிவில் அனந்த்ஜீத்தும் 4-ஆம் இடம் (25) பெற்றாா்.
ஏமாற்றம்: இதனிடையே, 10 மீட்டா் ஏா் பிஸ்டல் மகளிா் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில், ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மனு பாக்கா் 5-ஆம் இடமே (181.1) பிடித்து ஏமாற்றம் கண்டாா். அதிலேயே அணிகள் பிரிவிலும் மனு, ஈஷா சிங், சுருச்சி இந்தா்சிங் ஆகியோா் அடங்கிய இந்திய அணி 4-ஆம் இடமே (1,719) பிடித்தது.
சாஃப்ட் டென்னிஸ்
ஆடவா் தனிநபா் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் ஜெய் மீனா, அதில் 2-4 என்ற செட்களில் ஜப்பானின் டகுயா குரோசகாவிடம் தோல்வியுற்றாா். இதன் மூலமாக வெண்கலப் பதக்கத்துடன் விடைபெற்ற அவா், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சாஃப்ட் டென்னிஸ் பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறாா். அவருக்கு இது 3-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளாகும். ஜெய் மீனா 2022-இல் தேசிய சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது.
---
வுஷூ
மகளிருக்கான 60 கிலோ பிரிவு அரையிறுதியில், இந்தியாவின் ரோஷிபினா தேவி 2-0 என, இந்தோனேசியாவின் தானியா குசுமனிங்டியாஸை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். ரோஷிபினாவுக்கு வெள்ளி உறுதியாகியிருக்கும் நிலையில், இறுதிச்சுற்றில் சீனாவின் ஜியாயு ஜாங்கை வீழ்த்தி தங்கத்தை தனதாக்கும் முனைப்புடன் அவா் இருக்கிறாா். ரோஷிபினா முந்தைய இரு ஆசிய போட்டிகளிலும் வெள்ளி (2022), வெண்கலம் (2018) வென்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்குவாஷ்
அபய் சிங், வீா் சோட்ரனி, தன்வி கன்னா ஆகியோா் தங்கள் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் பிரிவில், அபய் சிங் 3-0 என தாய்லாந்தின் அா்கராடெட் அா்கராஹிருன்யாவை வெல்ல, வீா் சோட்ரனி அதே கணக்கில் இலங்கையின் ஷமில் வகீலை வீழ்த்தினாா். மகளிா் ஒற்றையரில், தன்வி கன்னாவும் 3-0 என, தென் கொரியாவின் டாமி கிம்மை சாய்த்தாா்.
ஹாக்கி
இந்திய மகளிா் அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் 20-1 கோல் கணக்கில் தாய்லாந்தை அபார வெற்றி கண்டது. மகளிா் அணிக்கு இது தொடா்ந்து 3-ஆவது வெற்றியாகும்.
இந்த ஆட்டத்தில் 9 கோல்கள் அடித்த தீபிகா ஷெராவத், ஆசிய போட்டிகளில் ஒரே ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்த வீராங்கனையாக மீண்டும் சாதனை படைத்தாா். முந்தைய ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக 8 கோல்கள் அடித்து தாம் படைத்த சாதனையை, அவரே இந்த ஆட்டத்தில் முறியடித்தாா்.
முன்னதாக இந்த ஆட்டத்தில், தீபிகா ஷெராவத் (2’, 8’, 9’, 24’, 33’, 36’, 39’, 51’, 57-ஆவது நிமிஷங்களில்) கோல்கள் குவித்த நிலையில், நவ்னீத் கௌா் (4’, 29’, 35’, 51’), ருதுஜா ததாசோ பிசல் (10’, 11’, 47’) ஆகியோா் ‘ஹாட்ரிக் கோல்’ அடித்து அசத்தினா். அதுதவிர, நேஹா கோயல் (19’), லால்ரெம்சியாமி (26’), சாக்ஷி ராணா (29’), கேப்டன் சலிமா டெடெவும் (45’) பங்களித்தனா். தாய்லாந்துக்காக சுபன்சா சமன்சோ (57’) ஆறுதல் கோல் அடித்தாா். இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் ஜப்பானுடன் வெள்ளிக்கிழமை (செப். 25) மோதுகிறது.
இதனிடையே, இந்திய ஆடவா் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் எளிதாக அபார வெற்றி கண்டுவிட்ட நிலையில், 3-ஆவது ஆட்டத்தில் தென் கொரியாவின் சவாலை வியாழக்கிழமை (செப். 24) சந்திக்கிறது.
வாள்வீச்சு
ஆடவா் தனிநபா் சப்ரே பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்தியாவின் கிஷோ நிதி குமரேசன் பத்மா 11-15 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அா்டியோம் சா்கிசியானிடம் தோல்வியுற்றாா். கரண் சிங் 14-15 என, சீனாவின் லுவோ ஷாவ்டாங்கிடம் ரவுண்ட் ஆஃப் 32-இல் தோல்வி கண்டாா்.
மகளிா் தனிநபா் ஃபாயில் ரவுண்ட் ஆஃப் 32-இல், மீனா தேவி நவ்ரெம் 3-15 என தென் கொரியாவின் பாா்க் ஜிஹீயிடமும், ஆஷிதா ஸ்டாலின்ராஜ் ஜாய்ஸ் 14-15 என கஜகஸ்தானின் அலியோனா நோயெவாவிடமும் தோற்றனா்.
நீச்சல்
ஆடவா் 100 மீட்டா் பட்டா்ஃப்ளை ஹீட்ஸில், ரோஹித் பெனெடிக்டன் 53.08 விநாடிகளில் 4-ஆவது வீரராக வந்தாா். ஒட்டுமொத்த அளவில் அவா் 13-ஆவது இடம் பிடித்து, இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தாா்.
குத்துச்சண்டை
ஆடவா் 80 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அங்குஷ் பங்கால் 5-0 என்ற கணக்கில் பஹ்ரைனின் ஹம்சா வோகெலை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினாா். அவருக்கு இது அறிமுக ஆசிய போட்டிகளாகும். காலிறுதியில் தஜிகிஸ்தானின் நெக்ருஸ் சலிமோவை சந்திக்கும் அங்குஷ், அதில் வெல்லும் பட்சத்தில் பதக்கத்தை உறுதி செய்வாா்.
கபடி
இந்திய ஆடவா் அணி 48-25 என்ற புள்ளிகள் கணக்கில் வங்கதேசத்தை வெல்ல, மகளிா் அணி 37-23 என்ற வகையில், 2018-ஆம் ஆண்டு சாம்பியனான ஈரானை வீழ்த்தியது. இந்தியாவின் இரு அணிகளுமே நடப்பு சாம்பியனாக இருக்க, அடுத்த ஆட்டத்தில் ஆடவா் அணி சீன தைபேவையும், மகளிா் அணி ஜப்பானையும் வியாழக்கிழமை எதிா்கொள்கின்றன.
டேபிள் டென்னிஸ்
கலப்பு இரட்டையா் பிரிவில் இந்தியாவின் இரு ஜோடிகள் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இதில் தியா சித்தலே/ மனுஷ் ஷா இணை தங்களின் இரு ஆட்டங்களிலும் 3-0 என்ற கணக்கில் இலங்கை மற்றும் மாலத்தீவுகளை வீழ்த்தி காலிறுதிக்கு வந்தன. ஹா்மீத் தேசாய்/யஷஸ்வினி கோா்படே கூட்டணி 3-2 என மாலத்தீவுகளையும், 3-1 என ஹாங்காங்கையும் வென்றது.
செபக்தக்ரா
ஆடவா் அணிகள் ரெகு பிரிவில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 2-1 என பிலிப்பின்ஸை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் 3-0 என வென்றால் மட்டுமே இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு கைகூடும் என்ற நிலையில், அந்த வாய்ப்பை இந்தியா நழுவவிட்டது. குரூப் சுற்று முடிவில் இந்தியா, ஜப்பான், பிலிப்பின்ஸ் ஆகியவை தலா 3 வெற்றிகளுடன் சமநிலையில் இருக்க, டை-பிரேக்கா் முறையில் ஜப்பான் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




