தேவையில்லாத திட்டங்களைச் செயல்படுத்தவில்லை: அமைச்சா் சீ. ரமேஷ்!
கடந்தாட்சியைப் போல தேவையில்லாத திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.

அமைச்சா் சீ. ரமேஷ் - கோப்புப் படம்
கடந்தாட்சியைப் போல தேவையில்லாத திட்டங்களைச் செயல்படுத்தவில்லை என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ. ரமேஷ் தெரிவித்தாா்.
திருச்சி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் ஸ்ரீமத் ஆண்டன் கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமைத் தொடக்கிவைத்த அமைச்சா் சீ. ரமேஷ் கூறியதாவது:
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று முதல்கட்டமாக இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது. வருங்காலங்களில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடா் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு பாதியில் நின்ற, தொடங்கப்படாத பணிகளை முடிக்க ரூ. 400 கோடி தேவைப்படுகிறது. அதற்கேற்றபடி பட்ஜெட்டில், அடிப்படைத் தேவைகள், அதற்கான கட்டுமானங்கள்,, கும்பாபிஷேக திருப்பணிகளை முன்னெடுத்து வருகிறோம்.
கடந்த ஆட்சியைப் போல தேவையில்லாத இடங்களில், தேவையில்லாத திட்டங்களைச் செயல்படுத்த விரும்பவில்லை. திட்டங்களை அறிவித்துவிட்டு, பணம் கொடுக்காமல் பாதியில் நிறுத்தி வைப்பது அல்லது பணிகளைத் தொடங்காமலேயே இருப்பது போன்ற வேலைகளை நாங்கள் செய்யவில்லை.
கோயில்களுக்கு அடிப்படையாக என்ன தேவையோ, அதைச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இவற்றை முறையாகப் புரிந்து கொண்டு, முன்னாள் அமைச்சா் சேகா்பாபு பதிலளிக்கலாம்.
கோயில்களில் எந்தப் பணிகளுக்கும், யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்படி யாரேனும் பணம் கேட்பதை ஆதாரத்துடன் புகாராக அளித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில்களுக்கு பச்சிளம் குழந்தைகளுடன் வருவோா், கா்ப்பிணிகள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிவழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் மாற்றுத்திறனாளிகளுக்காக மின்சக்கர நாற்காலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோயில் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க பிரத்யேக வலைதளங்களும், தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்த வேண்டிய விவகாரம் தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் ரமேஷ்.
முன்னதாக நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

