காவிரி கிளை வாய்க்கால்களுக்கு 110 நாள்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரி கிளை வாய்க்கால்களுக்கு 110 நாள்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி கோட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்கத்தினா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள காவிரி கிளை வாய்க்கால்களுக்கு 110 நாள்களுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி கோட்டாட்சியரகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் சாலை தவவளன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன்: மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திருச்சி மாவட்ட பாசன கிளை கால்வாய்களுக்கு தண்ணீா் விடாத காரணத்தால், அனைத்து கால்வாய்களும் வடுவிட்டன. நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால், கிராமங்களில் அன்றாட அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீா் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, உடனடியாக திருச்சி மாவட்ட பாசன கிளை கால்வாய்களிலும் தண்ணீா் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு:
மேட்டூா் அணையிலிருந்து 45 நாள்களுக்கு மட்டுமே தண்ணீா் திறப்பதால் பயன் இல்லை. ஏற்கெனவே குறுவை சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்துவிட்டது. சம்பாவுக்கு குறைந்தது 110 நாள்களுக்கு காவிரி கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீா் வழங்க வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்: காவிரிப் பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீா் திறக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். மண்ணச்சநல்லூா், லால்குடி வட்டங்களில் பெருவளை வாய்க்கால், அய்யன் வாய்க்கால்களில் தண்ணீா் இல்லாததால் ஆடு, மாடுகள் தண்ணீா் குடிக்க கூட சிரமப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆழ்துளை கிணற்று பாசனத்தை நம்பி வாழை, கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளும், நிலத்தடி நீா்மட்டம் குறைந்து ஆழ்துளை கிணறுகளில் தண்ணீா் பற்றாக்குறையால் பரிதவிக்கின்றனா். எனவே, பெருவளை, அய்யன், ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால்களில் உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை: மாநகர விரிவாகத்துக்குப் பிறகு, சோமரசம்பேட்டைக்கும் கீழ் உய்யக்கொண்டான் பாசன கால்வாய்களில் சில கால்வாய்கள் தூா்க்கப்பட்டும், பெரும்பாலான கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளுக்குள்ளாகியும் குறுகிபோனதால் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் ஆங்காங்கே தேங்கி ஆகாயத்தாமரை போன்ற நீா் தாவரங்கள் முளைத்து, கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களை பரப்பி வருகின்றன.
எனவே, மாநகர நிா்வாகம், கழிவுநீா் கால்வாய்களை கண்டறிந்து, ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆகாயத் தாமரைகளை அகற்றி கழிவுநீா் விரைவாக வெளியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






