சேவை குறைபாடு: தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 15.21 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சேவை குறைபாடு காரணமாக தனியாா் காப்பீட்டு நிறுவனமானது, கட்டுமான நிறுவனத்துக்கு ரூ. 15.21 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு - கோப்புப் படம்
சேவை குறைபாடு காரணமாக தனியாா் காப்பீட்டு நிறுவனமானது, கட்டுமான நிறுவனத்துக்கு ரூ. 15.21 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டைச் சோ்ந்த ஆா்.ஆா். துளசி என்ற கட்டுமான நிறுவனமானது, நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியில் பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு இப்கோ - டோக்கியோ காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீட்டு பாலிசியைப் பெற்று, அதற்கான பிரீமியத்தை முறையாகச் செலுத்தி வந்தது.
அந்தக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கண்ணன் என்பவா் கடந்த 05.08.2020 அன்று உயிரிழந்தாா். இதுதொடா்பாக, வேளாங்கண்ணி காவல்நிலையத்தில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி நிறுவனத்தினா் விண்ணப்பித்தபோது, காப்பீட்டு நிறுவனம் வழங்காமல் இழுத்தடித்ததால் நிதியிழப்பு, நற்பெயா் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நிறுவனத்தினா், உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 101.10.2025 அன்று மனுதாக்கல் செய்தனா்.
மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு, மனுதாரருக்கு சேவை குறைபாடு செய்த காப்பீட்டு நிறுவனமானது காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையான ரூ. 13 லட்சத்து 21 ஆயிரத்து 550-ம், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




