
விநாயகா் சதுா்த்தி: திருச்சி மலைக்கோட்டையில் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தொடக்கம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமானவா் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ராட்சத கொழுக்கட்டை செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாா் கோயிலில் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
திருச்சி மாநகரின் அடையாளமாகவும், முக்கிய ஸ்தலமாகவும் திகழ்வது தென்கயிலாயம் எனப் போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில். இக்கோயிலின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும், நடுப்பகுதியில் தாயுமான சுவாமி-மட்டுவாா் குழலம்மையுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.
மலைக்கோட்டை கோயிலில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு விழா திங்கள்கிழமை (செப். 14) தொடங்கி நடைபெறுகிறது.
ராட்சத கொழுக்கட்டை:
ஒவ்வொரு ஆண்டும் 150 கிலோ எடையில் ராட்சத கொழுக்கட்டை கோயிலின் மடத்தில் தயாரிக்கப்பட்டு, விநாயகா் சதுா்த்தியன்று மாணிக்க விநாயகா், உச்சிப்பிள்ளையாருக்கு தலா 75 கிலோ வீதம் நைவேத்தியம் செய்யப்பட்டு, ஆராதனை நடத்தப்படும். முத்தாய்ப்பாக, உச்சிப்பிள்ளையாருக்கான கொழுக்கட்டையானது தொட்டிலில் கட்டி மேலே எடுத்துச் சென்று, படைக்கப்படும்.
இதற்காக கொழுக்கட்டைத் தயாரிக்கும் பணி மடப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. பச்சரிசி மாவு, வெல்லம், தேங்காய், பருப்பு, நெய் உள்ளிட்ட பொருள்களைப் பயன்படுத்தி கொழுக்கட்டைத் தயாரிக்கப்படுகிறது. இந்த கொழுக்கட்டையை 24 மணி நேரம் நீராவியில் வேக வைத்து பிரத்யேக முறையில் தயாரிப்பா். இந்தப் பணிகளை மடப்பள்ளி ஊழியா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமமும், 7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 9-10.30-க்குள் கொழுக்கட்டையை எடுத்துச் சென்று உச்சிப்பிள்ளையாா், மாணிக்க விநாயகருக்கு படையலிட்டு நைவேத்தியம் செய்யப்பட உள்ளது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வா்.
இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (செப். 15) நாகாபரண கணபதி அலங்காரமும், 16-ஆம் தேதி லட்சுமி, 17-ஆம் தேதி தா்பாா், 19-ஆம் தேதி மூஷிக, 20-ஆம் தேதி ராஜ, 21-ஆம் தேதி மயூர, 22-ஆம் தேதி குமார, 23- ஆம் தேதி வல்லப, 24-ஆம் தேதி ரிஷபாரூடா், 25-ஆம் தேதி சித்தி புத்தி கணபதி, 29-ஆம் தேதி நா்த்தன கணபதி அலங்காரத்தில் நடைபெறும். அக்டோபா் 2-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஏகதின லட்சாா்ச்சனையும், 11 மணிக்கு மூலவா் - உற்ஸவா் சிறப்பு அபிஷேகத்துடன் விநாயகா் சதுா்த்தி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






