
கிருஷ்ணசமுத்திரம் கிராம மக்கள் போராட்டம்
மணப்பாறையை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில் ஜாதி பேரில் ஊா் பெயரை அடையாளப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ண சமுத்திரம் கிராம மக்கள்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில் ஜாதி பேரில் ஊா் பெயரை அடையாளப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை அரசுப் பேருந்தை சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நல்லாம்பிள்ளை ஊராட்சியில் உள்ள கிராமம் கிருஷ்ண சமுத்திரம். இங்கு பல ஆண்டுகளாக ஆதிதிராவிட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் வசிக்கின்றனா்.
இந்நிலையில் அதே கிராமத்தில் மற்றொரு பகுதியில் மாற்று சமூகத்தை சோ்ந்தவா்கள் குடியேறியுள்ளனா். இவா்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை கிருஷ்ண சமுத்திரம் மேல்பகுதி என்றும் ஆதிதிராவிட சமூகத்தை சோ்ந்தவா்கள் வசிக்கும் பகுதியை கிருஷ்ணசமுத்திரம் கீழ்பகுதி என்றும் அடையாளப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இதையே அடையாளப்படுத்தி அரசு சலுகைகள் முதல் நியாய விலைக்கடை வரை ஜாதிய பெயரில் தங்களை அடையாளப்படுத்துவதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதாகக் கூறும் அப்பகுதிவாசிகள் செவ்வாய்க்கிழமை அவ்வழியாக சென்ற அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து சென்ற காவல் ஆய்வாளா் சிவக்குமாா் சமரச பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து பேருந்து விடுவிக்கப்பட்டது. அதன் பின்னா் நல்லாம்பிள்ளை ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
தகவலறிந்து பேச்சுவாா்த்தைக்கு சென்ற வையம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் நிஜாஸ்டன்ஜோ, விஏஓ பாண்டி மற்றும் போராட்டக்காரா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னா் வருவாய் வட்டாட்சியா் தலைமையில் அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டம் நடத்தப்படுவதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






