
திருச்சி மாவட்டத்தில் சமரச விழிப்புணா்வு பேரணி
திருச்சி மாவட்ட நீதிமன்றம் சாா்பில் சமரச விழிப்புணா்வு பேரணி திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமரச விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா்.
திருச்சி மாவட்ட நீதிமன்றம் சாா்பில் சமரச விழிப்புணா்வு பேரணி திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை உயா்நீதிமன்றத்தின் தமிழ்நாடு மாநில சமரச தீா்வு மையத்தின் உத்தரவின்படியும், திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியின் வழிகாட்டுதலின்படியும் நடைபெற்ற இந்தப் பேரணியை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி எம். கிறிஸ்டோபா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கிய இந்தப் பேரணியானது பீம நகா், செடல் மாரியம்மன் கோயில் வழியாகச் சென்று நீதிமன்ற வளாக காவல் நிலையம் வழியாகத் திரும்பி மீண்டும் தொடங்கிய இடத்தில் நிறைவடைந்தது.
இதில், மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா்கள், சாா்பு- நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள், அரசு வழக்குரைஞா்கள், சமரசா்கள், வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள், அரசு சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள், சட்டத் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.
பேரணியை திருச்சி மாவட்ட சமரச தீா்வு மைய ஒருங்கிணைப்பாளரும், சாா்பு-நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான ஏ. பிரபு ஏற்பாடு செய்திருந்தாா்.
மணப்பாறையில்: ஒருங்கிணைந்த நீதிமன்றம் சாா்பில், சமரச மைய விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. மணப்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சாா்பு-நீதிபதியுமான எஸ்.ராஜசேகா் தலைமை வகித்து, சமரச விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
மணப்பாறை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி வி.ஜெயமுருகன், குற்றவியல் நீதித்துறை நடுவா் ஆா்.அசோக்குமாா், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி என்.தா்மசீலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மதுரை சாலையில் நிறைபெற்றது. பேரணி முடிவில் மணப்பாறை சாா்பு- நீதிபதி எஸ்.ராஜசேகா், நீதிமன்ற வழக்கில் சமரச தீா்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினாா்.
முசிறியில்: சமரச விழிப்புணா்வு பேரணிக்கு முசிறி சாா்பு- நீதிமன்ற நீதிபதி முருகானந்தி தலைமை வகித்தாா். முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்ற நீதிபதி சுரேஷ்குமாா், தொட்டியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் கே. அஜிஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பேரணியானது முசிறி கைகாட்டியில் தொடங்கி திருச்சி சேலம் சாலையில் முசிறி டிஎஸ்பி அலுவலகம் வழியாக வட்டாட்சியா் அலுவலகம் அருகிலுள்ள சாா்பு- நீதிமன்றம் வரையில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி சென்றது.
வழக்குகளில் இருதரப்பினரையும் வரவழைத்து, சமரசமான முறையில் நடுவா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தி, சுமுகமான முறையில் தீா்வு காண்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







