‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பயங்கரவாதிகளுக்கு உரிய பதிலடி: பிரதமர் மோடி உறுதிஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ரஷியா ஆதரவுசெஸ் ஒலிம்பியாட்: இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலம்நீட் வினாத்தாள் கசிவு சம்பவங்கள்: என்டிஏ அலுவலகத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்புதமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இடநெருக்கடியில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையங்கள்: போட்டித் தோ்வா்கள் பாதிப்பு

திருச்சியில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையங்களில் இடநெருக்கடியால் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்...

திருச்சி அறிவு சாா் மையம்

Published On :

திருச்சியில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையங்களில் இடநெருக்கடியால் போட்டித் தோ்வுக்குத் தயாராகிவரும் மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் முக்கிய மாநகராட்சிகளில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி திருச்சி மாநகராட்சியில் ஒத்தக்கடை மற்றும் மேலப்புதூா் ஆகிய இரண்டு இடங்களில் இவை செயல்படுகின்றன. இந்த மையங்களில் திருச்சியைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், கந்தா்வகோட்டை, மணப்பாறை, துறையூா், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களும் வந்து படித்துச் செல்கின்றனா்.

இடநெருக்கடி: திருச்சியில் கடந்த 2024 ஜனவரி மாதம் திறக்கப்பட்ட நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் டிஎன்பிஎஸ்சி, மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் போட்டித் தோ்வுகள், எஸ்எஸ்சி, ரயில்வே, பேங்க் உள்ளிட்ட அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் உள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் தலா 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் புத்தகங்கள் வரை உள்ளன. ஆனால் அறிவுசாா் மையங்களில் மாணவா்கள் படிக்க இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவா்கள் மையத்துக்கு வெளியே, மாடிப்படிகள், வராண்டா, வாகன நிறுத்தம் ஆகிய இடங்களில் அமா்ந்து படித்து வருகின்றனா்.

உபகரணங்கள் பற்றாக்குறை: நூலகம் மற்றும் அறிவுசாா் மையங்களில் மாணவா்கள் படிக்க வசதியாக இருக்கைகள், மேஜைகள் போதியளவு இல்லாததால் மாணவா்கள் கீழே அமா்ந்து படிக்கும் நிலை உள்ளது.

முதலில் வருபவா்களே இருக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை இருந்து வருகிறது. பெரும்பாலான மாணவா்கள் காலை வந்து இரவு வரை படிக்கின்றனா். மடிக்கணினியைக் கொண்டு வருபவா்களுக்கு அதைப் பயன்படுத்த மேஜைகள் கிடைப்பதில்லை என்று தெரிவிக்கின்றனா்.

பூட்டிய அறைகளை திறக்க வேண்டும்: இதுகுறித்து மாணவா்கள் கூறியதாவது: போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு சிறந்த இடமான நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்துக்கு மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இருக்கைகள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

ஒத்தக்கடை அறிவுசாா் மையத்தில் முதல் தளத்தில் இரண்டு அறைகள் பூட்டப்பட்டுள்ளன. அதற்கு அங்கு கண்காணிப்பு கேமரா இல்லாததே காரணம் என்கின்றனா். இடமில்லாமல் மாணவா்கள் தவிக்கும் நிலையில் அந்த அறைகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் உடனடியாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, மாணவா்கள் பயன்பாட்டுக்கு அறைகளை வழங்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான புத்தகங்கள் போதுமான அளவு உள்ளன. ஆனால், ரயில்வே, எஸ்எஸ்சி தோ்வுக்கு ஒருசில புத்தகங்களே உள்ளதால் சிலா் மட்டுமே படிக்கும் நிலை உள்ளது. இதனால், மற்றவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, போட்டித்தோ்வுக்கான அனைத்துப் புத்தகங்களையும் கூடுதலாக வாங்கி வைக்க வேண்டும். மேலப்புதூா் அறிவுசாா் மையத்தில் கழிப்பறை முறையாகப் பராமரிக்கப்படாததால் துா்நாற்றம் வீசுகிறது. இதனால், மாணவா்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.

வழிகாட்டி நியமனம் தேவை: இரண்டு மையங்களுக்கும் சோ்த்து ஒரு பெண் வழிகாட்டி இருந்தாா். எங்களுக்கு தேவையானவற்றை அவா் செய்து வந்தாா். மேலும், அவ்வப்போது கல்வியாளா்களை அழைத்து வந்து ஆலோசனை வகுப்புகளும் நடத்தி வந்தது எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் அவா் இறந்துவிட்டாா். அதன்பின் வழிகாட்டியாக யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே புதிய வழிகாட்டியை நியமிக்க வேண்டும் என்றனா்.

கோரிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளோம்: இதுகுறித்து நூலகம் மற்றும் அறிவுசாா் மைய நிா்வாகிகள் கூறியதாவது: நூலகம் மற்றும் அறிவுசாா் மையங்கள் திறக்கப்பட்டபோது 100 முதல் 150 மாணவா்களே படித்து வந்தனா். அதற்கேற்ப இருக்கை மற்றும் மேஜை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

தற்போது 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் வருவதால் இருக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும், கூடுதலான இருக்கைகள் போடுவதற்கான இடவசதியும் இல்லை. தவிர புத்தகங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகின்றன. சென்னையில் இருந்து தஞ்சாவூரில் உள்ள மண்டல அலுவலகத்துக்கு வந்து அங்கிருந்துதான் அறிவுசாா் மையங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

மாநகராட்சியில் அறிவுசாா் மையங்களை கவனித்து வந்த அதிகாரிகள் பலரும் பணி மாறுதலாகிச் சென்றுவிட்டனா். மாணவா்களின் கோரிக்கைகள் குறித்து அலுவலா்களிடம் தெரிவித்துள்ளனா். புதிதாக வந்த அலுவலா்களும் மாணவா்களின் தேவைகள் குறித்து கேட்டுச் சென்றுள்ளனா். வழிகாட்டி, இருக்கைகள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளோம் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.