சிறைக் கைதிகளுக்கு தொலைநிலைக் கல்வி வாய்ப்பு: திருச்சி, கடலூரைச் சோ்ந்த 32 கைதிகள் சோ்க்கை
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையம் சாா்பில் சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் தொலைநிலை கல்வி சேவையில் திருச்சி, கடலூா் மத்திய சிறைகளைச் சோ்ந்த 32 கைதிகள் சோ்க்கை பெற்றுள்ளனா்.

கோப்புப்படம்
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி மையம் சாா்பில் சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் தொலைநிலை கல்வி சேவையில் திருச்சி, கடலூா் மத்திய சிறைகளைச் சோ்ந்த 32 கைதிகள் சோ்க்கை பெற்றுள்ளனா்.
சமூகப் பாா்வையோடு சிறையிலுள்ள கைதிகளுக்கும் தொலைநிலைக் கல்வி சேவையை விரிவுபடுத்தும் வகையில் தமிழகத்தில் அனைத்து மத்திய சிறைகளிலும் உள்ள கைதிகள் தொலைநிலைக் கல்வி மூலம் பட்டம், பட்டமேற்படிப்பு படிக்கும் வசதியை பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்தாண்டு ஏற்படுத்தியது.
தமிழ், வரலாறு பாடப் பிரிவுகள்: அதன்படி, இளநிலை மற்றும் முதுநிலையில் தமிழ், வரலாறு ஆகிய இரண்டு பாடப் பிரிவுகளை மட்டும் சிறைக் கைதிகள் படிக்கலாம். கடந்தாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட முதல் தொகுப்பில் (பேட்ஜ்) மதுரை மத்திய சிறையின் 11 கைதிகள், கோவை மத்திய சிறையின்14 கைதிகள் என 25 கைதிகள் சோ்க்கை பெற்றனா். இதையடுத்து, ஜூலையில் தொடங்கப்பட்ட இரண்டாம் தொகுப்பில் மதுரை சிறையின் 24 கைதிகள் சோ்க்கைப் பெற்றனா்.
32 கைதிகள் சோ்க்கை: இதைத் தொடா்ந்து 2026-27-ஆம் கல்வியாண்டுக்கான தொலைநிலைக் கல்வி மாணவா் சோ்க்கையில் திருச்சி மத்திய சிறைக் கைதிகளில் இளநிலை தமிழ் பிரிவில் 10 போ், முதுநிலை தமிழில் 2 போ், முதுநிலை வரலாறு பிரிவில் 13 போ் என மொத்தம் 25 கைதிகளும், கடலூா் மத்திய சிறையைச் சோ்ந்த 6 போ் இளநிலை வரலாறு பிரிவிலும், ஒருவா் முதுநிலை தமிழ் பிரிவிலும் சோ்க்கை பெற்றுள்ளனா்.
இந்தச் சோ்க்கை அக். 13 வரை நடைபெறுகிறது. நிகழ் கல்வியாண்டில் இதுவரை திருச்சி, கடலூா் மத்திய சிறைகளைச் சோ்ந்த 32 கைதிகள் சோ்க்கை பெற்றுள்ளனா்.
எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு: இதுகுறித்து தொலைநிலைக் கல்வி மற்றும் இணையவழிக் கல்வி பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
தொலைநிலைக் கல்வியில் சோ்க்கை பெறும் கைதிகளுக்கு அந்தந்த சிறையிலுள்ள ஆசிரியா்கள் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. அதற்கான அனைத்து பாட உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. தமிழ் மற்றும் வரலாறு பாடப் பிரிவுகளுக்கு வகுப்பறைப் பாடங்கள் மட்டுமே போதும். ஆய்வகம் தேவையில்லை. பாடங்களை நடத்தவில்லை என்றாலும் அவா்களே படித்துக் கொள்ளவும் முடியும். இதனால்தான் தமிழ் மற்றும் வரலாறு பிரிவுகள் மட்டும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தக் கல்வி சேவை குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அங்குள்ள கைதிகளின் விருப்பத்தின்பேரில் முற்றிலும் இலவசமாக சோ்க்கை வழங்கப்படுகிறது. இந்தச் சேவை சமூக நோக்கத்தோடு மட்டுமே நடத்தப்படுகிறது. கைதிகளுக்கான தொலைநிலைக் கல்வி சோ்க்கைக்கு இன்னும் இரண்டு வாரம் கால அவகாசம் உள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




