பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

கேளீர் தமிழ் வரலாறு - 7: இத்தாலிக்குப் போன 'தொல்காப்பிய ஆராய்ச்சி'!

தமிழ் உலகத்தில் பரிசு மழை கொட்டோ கொட்டென்று கொட்டிய ஆண்டுகள்!

Published On :

1911, 1912.

தமிழ் உலகத்தில் பரிசு மழை கொட்டோ கொட்டென்று கொட்டிய ஆண்டுகள்!

சங்க இலக்கியத்துக்குத் தங்கப் பதக்கம்!

தொல்காப்பியத்திற்கோ அந்த நாளில் ஏறத்தாழப் பன்னிரண்டு பவுன் தங்கம் வாங்கும் அளவிற்குப் பணப்பரிசில்!

கடந்த காலத்துச் சென்னை மாகாணத்தின் இரண்டு பெரிய ஆளுமைகள் இ.பி.பவல் துரையும் வில்லியம் அம்புரோஸ் மூர்ஹெட் துரையும்.

முன்னவர், சென்னை மாநிலக் கல்லூரியின் முதல் முதல்வர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் சிறப்பாகப் பட்டம் பெற்றவர்.

பின்னவரோ சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். சென்னை மாகாணத்தின் இடைக்கால ஆளுநராகவும் இருமுறை பொறுப்பு வகித்தவர்.

இந்த இருவர் பெயரும் ஒருசேர அமைந்த மதிப்புமிக்க பரிசு ஒன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நிறுவப்பட்டிருந்திருக்கிறது.

'பவல் அண்டு மூர்ஹெட் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்' என்பது அதன் பெயர். அறிவியல், பிற துறைகள், தமிழ், தெலுங்கு முதலிய மொழிகள் ஆகியவற்றில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சிறப்பாகப் படைப்போருக்கு இந்தப் பரிசு.

1911-ஆம் ஆண்டு இந்தப் பரிசு தமிழுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.

தமிழில் எந்தப் பொருளில் ஆராய்ச்சிக் கட்டுரை படைக்கவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது தெரியுமா?

3.3.1911-ஆம் தேதி 'சுதேசமித்திரன்' நாளிதழில் இந்த அறிவிப்பு இப்படிச் செய்தியாக வெளிவந்திருந்தது.

'பிரசிடென்சி காலேஜ்' இவ்வருஷம் 'சங்க காலத்திய நூல்களின் விசேஷத் தன்மையும் அபூர்வ மகிமையும்' என்ற விஷயமாய் தமிழில் சிறந்த பிரபந்தம் எழுதுகிறவர்களுக்கு 'பவல் அண்டு மூர்ஹெட் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்' அளிக்கப்படுமாம்.

ஆங்கிலேயராட்சிக் காலத்தில் சங்க இலக்கிய ஆராய்ச்சிக்குத் தங்கப் பதக்கம்! வரலாறு படைக்கும் வரலாற்று நிகழ்வல்லவா? சங்க இலக்கியத்தைப் பொருண்மையாக ஆக்கியதன் பின்னணியில் உ.வே.சா. இருந்திருக்க வேண்டும். அப்போது அவர்தான் அங்கே புகழ்பெற்ற தமிழ்ப் பண்டிதர்.

எத்தனை பேர் போட்டியில் பங்கேற்றனர்? பரிசு பெற்றவர் யார்? என்பன வரலாற்றின் இருண்ட பக்கங்களில் புதையுண்டு கிடக்கின்றன. அறிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளலாம்!

இன்னொரு முக்கியமான நிகழ்வு - 1912.

தமிழர்களின் இலக்கிய மேன்மையின் உச்சம் சங்க இலக்கியம்! தமிழர்களின் சிந்தனை மேன்மையின் உச்சம் திருக்குறள்! தமிழர்களின் இலக்கண மேன்மையின் உச்சம் தொல்காப்பியம்! இந்த இலக்கண ஆக்கத்தில் உச்சம்தான் அதன் பொருளதிகாரப் பகுதி.

இந்தத் தொல்காப்பியத்தைக் குறித்து, அதன் சிறப்பான பொருளதிகாரத்தைக் குறித்து ஆராய்ச்சி நூல் படைக்கும் மிகப் பெரிய போட்டியொன்று 1912-இல் நடந்தது.

போட்டியை ஏற்பாடு செய்தது அரசாங்கமோ மதுரைத் தமிழ்ச் சங்கமோ இல்லை; தமிழகத் தமிழர் யாரும் இல்லை; கொழும்புவில் வாழ்ந்த யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்!

கொழும்புவிலிருந்து கடிதவழி உ.வே.சா.வோடு பழகி உ.வே.சா.வின் பதிப்புப் பணிகளுக்கு உதவிய இலங்கைப் பிரமுகர் பொ. குமாரசாமி அவர்களின் மகன்தான் ஸ்ரீகாந்தன் என்னும் டாக்டர் ஸ்ரீ காந்த முதலியார்.

பொ. குமாரசாமி, புகழ்மிக்க பொன்னம்பலம் இராமநாதன், பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரின் சகோதரர். தந்தை மறைந்தபின் அவரது நினைவைப் போற்றும் வகையில் தந்தையின் நண்பர் உ.வே.சா.வின் மூலமாக ஸ்ரீ காந்த முதலியார் 1912-இல் தொல்காப்பிய ஆராய்ச்சிப் போட்டியொன்றை நடத்தினார்.

இதற்கான அறிவிப்பு 19.1.1912 சுதேசமித்திரன் நாளிதழில் வெளிவந்தது. உ.வே. சாமிநாதையர் பெயரால் வெளிவந்திருந்த அறிவிப்பின் தலைப்பே ஈர்க்கத்தக்க விதத்தில்தான் இருந்தது.

தலைப்பு: 'ஒரு தமிழ் வியாசத்துக்கு ரூபாய் 200'.

'கொழும்பிலுள்ள ஸ்ரீமான் கு. ஸ்ரீகாந்த முதலியாரவர்கள் (ஸ்ரீவிலாசம், ரோஸ் மீட் பிளேஸ், கொழும்பு) காலஞ்சென்ற தம்முடைய அருமைத் தந்தையாரும் சிறந்த பாஷாபிமானியுமாகிய ஸ்ரீமான் பொ. குமாரசாமி முதலியாரவர்களுடைய ஞாபகத்தின் பொருட்டு, தமிழ்வசன நடையில் தொல்காப்பியப் பொருளதிகார மூலத்தையும், உரையையும் நன்றாக ஆராய்ச்சி செய்து, அடியிற்கண்ட விவரப்படி வியாசம் எழுதுபவருக்கு ரூபா 200 (இருநூறு) பரிசளிக்க நிச்சயித்திருக்கிறார்கள்' என்பது சுதேசமித்திரன் அறிவிப்பின் முதல் பகுதி.

எழுதப்படும் ஆராய்ச்சி 'டெம்மி 8 பக்க அளவுகொண்ட 100 பக்கமுள்ள ஓர் அச்சுப்புஸ்தகமாகப் பதிப்பிக்கும்படி வியாசம் எழுதப்படல் வேண்டும்' எனவும், 'இந்த நூறு பக்கத்தில் 60 பக்கங்களுக்குக் குறையாமல் அகப்பொருளைப் பற்றி யிருத்தல் வேண்டும்' எனவும் போட்டி அறிவிப்பில் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

பரிசுத்தொகை ரூபாய் இருநூறுக்கு ஏறத்தாழப் பன்னிரண்டு பவுன் தங்கத்தைப் போட்டி நடந்த காலத்தில் வாங்கியிருக்கலாமாம்.

தமிழுலகில் தொல்காப்பிய ஆராய்ச்சிக்காக நடந்த மாபெரும் முதல் போட்டி இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

Story image

இந்தப் போட்டியில் இருநூறு ரூபாய் பரிசைப் பெற்றவர் யார் தெரியுமா?

ஏறத்தாழ எட்டாண்டுகள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'செந்தமிழ்' இதழுக்கு ஆசிரியராக விளங்கியவர்- போட்டியில் பரிசு பெறுவதற்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே 1907-இல், 'தங்கள் பாண்டித்தியத்தை நான் புகழ வரவில்லை. அதனை உலகமறியும். தங்களுடைய பரிசுத்த நெஞ்சிலே எழுந்திருக்கும் 'ஸ்வதேச பக்தி' என்ற புது நெருப்பிற்குத்தான் நான் வணக்கம் செய்கிறேன்' எனப் பாரதியாரால் கடிதமெழுதிப் போற்றப்பட்டவர்-

பாரதியார் கடிதமெழுதிய அடுத்த வாரத்திலேயே 'நற்றவக் கொழுந்தே! நாவலர் அரசே!' என வ.உ. சிதம்பரனாராலே கவிதையில் பாராட்டப்பட்டவர் -

என அடுக்கிக் கொண்டே போகலாம் அவரது பெருமைகளை!

அவர்தான், பின்னாளில் தமிழ்ப் பேரகராதிப் பணிக்குழுவின் தலைமைப் பண்டிதர் பதவி முதல் திருவனந்தபுரம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் பதவி வரை ஏற்று முதுதமிழுக்குத் தொண்டு செய்த மு. இராகவையங்கார்!

1912-இல் போட்டி நடந்தது. பரிசுபெற்ற நூலோ 1922-ஆம் ஆண்டுதான் வெளிவந்தது.

பத்தாண்டுகள் இடைவெளி!

என்ன காரணம்? ஏன் இவ்வளவு காலதாமதம்?

ஒரு சுவையான, இல்லையில்லை சோகமான வரலாறு இதில் ஒளிந்துகிடக்கிறது.

பரிசுபெற்ற நூலுக்கான கையெழுத்துப் பிரதி இத்தாலி நாட்டில் பத்து ஆண்டுகள் முடங்கிக் கிடக்க நேர்ந்துவிட்டது.

அந்தக் கதையை மு. இராகவையங்கார் கூற்றின் வழியாகவே அறிவோம்!

'இவ்வியாசத்தை நான் எழுதி முடித்து ஏறக்குறையப் பத்து வருஷங்களாகியும், இதுவரை அச்சிடப்படாமல் தாழ்க்கும்படி நேர்ந்தது என் துரதிருஷ்டமே. இவ்வாறு தாமதிக்க நேர்ந்ததற்கு - இதனை எழுதுவித்த பிரபுவினிடம் இருந்த இதன் சுத்தப் பிரதியை அவர் நண்பரொருவர் பார்வையிடும் பொருட்டு இட்டாலி தேசத்திற்குக் கொண்டுபோகும்படி நேர, அப்போது ஐரோப்பிய மகாயுத்தந் தொடங்கி அத்தேசத்தையும் பீடித்ததே முக்கிய காரணமாகும். அப்பெரும் போர் முடிந்தபின்பே இதன் கையெழுத்துப் பிரதியை அவர்கள் பெறும்படி ஆயிற்று. பிரதி கிடைத்ததும் என் விருப்பத்திற்கிணங்கி யானே அச்சிட்டுக்கொள்ளுமாறு அப்பிரபு அன்புகூர்ந்து அதனை அனுப்பியுதவினார்கள்.

தான் எழுதிப் பரிசுபெற்ற நூலுக்கான கையெழுத்துப் பிரதியைப் பெறமுடியாமல் மு.இராகவையங்கார் பத்தாண்டுகளில் எத்தனை ஆயிரம் முறை எண்ணி ஏங்கித் தவித்திருப்பார்? மிகக் கொடிய துயரல்லவா இது!

உலக இலக்கணங்களுள் தனித்தன்மை கொண்டது தொல்காப்பியம் என்பதால் அதற்கெழுந்த முன்னோடி ஆராய்ச்சியும் உலகம் சுற்றி வந்ததோ! உலகளாவிய பயணம் மேற்கொண்டு மீண்டுவந்து 1922-இல் நூல்வடிவம் பெற்றது மு. இராகவையங்காரின் 'தொல்காப்பியப் பொருளதிகார ஆராய்ச்சி'!

இன்னுமொரு போட்டியைப் பற்றி அறிந்துகொள்வோமா?

அரைநூற்றாண்டுக்குப்பின் 1967-இல் தொல்காப்பிய ஆராய்ச்சிப் போட்டி! மாபெரும் போட்டி! பரிசுத் தொகை ஆயிரம் ரூபாய்! 1967- இல் ஆயிரம் ரூபாய்க்கு 12 பவுன் தங்கம் வாங்கிவிடலாம் என்றால் அது எவ்வளவு பெரிய பரிசு?

முந்தைய போட்டி தொல்காப்பியப் பொருளதிகாரத்தைப் பற்றிய ஆராய்ச்சிக்காக! இந்தப் போட்டியோ அந்தப் பொருளதிகாரத்தின் ஓர் இயலான செய்யுளியலில் இடம்பெற்ற இரண்டு நூற்பாக்களின் கருத்தினைத் தெளிவுபடுத்துவதற்காக!

'ஐவகை அடியும்', 'மெய்பெறு மரபின்' எனத் தொடங்கும் இரண்டு நூற்பாக்கள் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் செய்யுளியல் என்னும் பகுதியில் உள்ளன. உரைநடையில் வரி என்பதுபோலப் பாடல்களில் அடி என்போம். பாடல்களில் எதுகை, மோனை என ஓசை அழகை ஏற்படுத்தும் கூறுகளைத் தொடை என்போம். அடி, தொடை தொடர்பான இலக்கண நூற்பாக்கள் இவ்விரண்டும். இந்த இரு நூற்பாக்களும் உரையாசிரியர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் பதம்பார்த்தவை. இந்த நூற்பாக்களின் பொருளைத் தெளிவுபடுத்தினால் பரிசுத்தொகையில் பன்னிரண்டு பவுனை வாங்கிவிடலாம்.

இந்தப் போட்டியை நடத்தியவரின் தாய்மொழி தெலுங்கு. பெயர் பூ.கு. குப்புசாமி ராஜா. இராஜபாளையத்துக்காரர். 'நாமமது மட்டும் தமிழரெனக் கொண்டவர்கள்' வெட்கப்படத்தான் வேண்டும். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் தொல்காப்பியத்தின் இரண்டு நூற்பாக்களின் ஆராய்ச்சிக்காக ஆயிரம் ரூபாய் செலவிட்டிருக்கின்றார்.

இருபத்தெட்டு வல்லாளர்கள் போட்டியில் கலந்துகொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்பினர். போட்டிக்கு நடுவர் யார் தெரியுமா? அப்போது மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக வீற்றிருந்த பல்கலைச் செல்வர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார். 'ஆயிரம் ரூபாய்க்குச் சேதமில்லை, உங்கள் வீட்டிலேயே பணம் இருக்கலாம்' என்று குப்புசாமி ராஜாவிடம் தெ.பொ.மீ. சொன்னார். புரிகிறதா?

'ஐயத்தினை முழுதும் நீக்கித் தெளிவுபடுத்தும் உரை ஒன்று பரிசுபெறுமளவில் வந்துள்ளதாகக் கூறுவதற்கில்லை' என்பது நடுவரின் தீர்ப்பு.

ஆனால், பரிசை வழங்கியே தீருவேன் எனக் கூறிவிட்டார் போட்டியை அறிவித்தவர். வந்தவற்றுள் சிறந்த உரையைப் படைத்த அடிகளாசிரியருக்கு ஐந்நூறு ரூபாய், முயன்று எழுதிய ஐவருக்கு நூறு நூறு ரூபாய் எனப் பகுத்தளித்து முறைசெய்தார் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார். நூறு ரூபாய் பெற்றவர்களுள் ஒருவர் புலவர் குழந்தை. போட்டியில் பங்கேற்ற திருமதி ஆர். மாஸ்கரேனஸ் அவர்களுக்கு ஆறுதல் பரிசாக நூறு ரூபாயைக் கூடுதலாக வழங்கித் தமிழ்ப் புலமையில் பெண்கள் வளர ஊக்குவித்தார் குப்புசாமி ராஜா. அவரே நூற்பாக்களின் கருத்தை விளக்கி ஒரு நீண்ட கட்டுரையை எழுதித் 'தொல்காப்பியச் செய்யுளியல்: இரு சூத்திர விளக்கம்' என நூலாக வெளியிட்டார் என்பதும் வரலாறு.

தொல்காப்பிய ஆராய்ச்சி வரலாற்றில் இந்தப் போட்டியும் அடிகளாசிரியரும் புலவர் குழந்தையும் தெ.பொ.மீ.யும் குப்புசாமி ராஜாவும் ஏன் திருமதி ஆர். மாஸ்கரேனசும் என்றென்றும் நிலைபெற்று நிற்கக் காண்கிறோம்.

ஆயிரம் பொன் பரிசைப் பெற்றுத்தர வல்ல, கோடிப் பொன் பெறுமதியுள்ள சங்கப் பாடல் 'கொங்குதேர் வாழ்க்கை'. அப்பாடல் தோன்றக் காரணமாகச் சொல்லப்படும் போட்டி குறித்து நாம் அறிவோம்! புனைவு, மெய்ம்மை எனும் விவாதங்கள் தாண்டித் தமிழிலக்கிய வரலாற்றில் நாம் கேள்விப்பட்ட சங்கப் பாடல் பற்றிய முன்னோடிப் போட்டி அது! வரலாறு நெடுகப் பலப்பல போட்டிகள்! தமிழிலும் தமிழுக்கும்! எதிர்கொண்டு பெற்ற வெற்றிகளால் நிலைபெற்று நிற்கின்றது நிகரிலாத் தமிழ்!

(தொடரும்)

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.