/

நில அளவைத் துறையால் தாமதமாகும் பத்திரப் பதிவு

அரக்கோணம், டிச. 12: அரக்கோணம் வட்டத்தில் நில அளவைத் துறையில் அளிக்கப்படும் மனுக்கள் மீது தாமதமாக எடுக்கப்படும் நடவடிக்கையால், பல இடங்களில் பத்திரப் பதிவுகள் தாமதமாக துவங்குகின்றன.  பத்திரப் பதிவுக்கு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:24 am

எஸ்.சபேஷ்

அரக்கோணம், டிச. 12: அரக்கோணம் வட்டத்தில் நில அளவைத் துறையில் அளிக்கப்படும் மனுக்கள் மீது தாமதமாக எடுக்கப்படும் நடவடிக்கையால், பல இடங்களில் பத்திரப் பதிவுகள் தாமதமாக துவங்குகின்றன.

 பத்திரப் பதிவுக்கு முன் குறிப்பிட்ட நிலத்தை நில அளவைத் துறையினர் அளந்து கொடுப்பர். இதற்காக நிலம், வீட்டுமனை வாங்குவோர், பட்டா கோருவோர் தங்களது நிலத்தை அளந்து கொடுக்குமாறு நில அளவைத் துறையில் தங்களது நிலத்துக்கு ஏற்றார் போல் பணத்தை செலுத்தி மனு அளிக்கின்றனர்.

 4 மாதங்கள் வரை தாமதம்?

 மனுக்கள் பெற்ற 10 நாள்களில் நில அளவைத் துறையினர் நிலத்தை அளந்து கொடுத்து வந்தனர். ஆனால், கடந்த 1 வருடமாக அரக்கோணம் வட்டத்தில் நில அளவைத் துறையில் அளிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் இருந்து வருவதாகவும், 4 மாதங்களுக்கு பிறகு கூட பெறப்பட்ட மனுக்களின் நிலை தெரிவிக்கப்படுவதில்லையென்றும் புகார் எழுந்துள்ளது.

 "நில அளவை ஆய்வாளர் ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார், கலைஞர் வீடு கட்டும் திட்டப் பணிக்குச் சென்றுள்ளார்...' என்ற பதில்களே நில அளவை அலுவலகத்தில் தெரிவிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 நவம்பர் மாதம் வரை 385 மனுக்கள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாகவும், இதில், அம்மாதம் பெறப்பட்டது 172, தொடர் காத்திருப்போர் பட்டியலில் 213 மனுக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் அரக்கோணம் வட்டத்தில் மட்டும் பலர் தாங்கள் வாங்கிய நிலங்களை பதிவு செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 தாமதத்தால் அதிகரிக்கும் குற்றங்கள்?

 இந்நிலையில், அரக்கோணம் நகரம் மற்றும் தாலுகா காவல் நிலையங்களில் நாள்தோறும் நில மோசடி தொடர்பாக குறைந்தது 5 புகார்களாவது வருவதாகக் கூறப்படுகிறது.

 எனவே, நில அளவைத் துறையில் கூடுதல் அலுவலர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 கூடுதல் அலுவலர்கள், பணியாளர்கள் தேவை:

 இதுகுறித்து நில அளவைத் துறை அலுவலகம் தரப்பில் கூறியது:

 வேலூர் மாவட்டத்தில் அரக்கோணத்தில்தான் அதிக மனுக்கள் பெறப்படுகின்றன.

 நில அளவைத் துறையில் அலுவலர்கள், பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

 தற்போது, கலைஞர் வீடு கட்டும் திட்டப் பணிக்காகவும் தினமும் செல்ல வேண்டியுள்ளது. இதுமட்டுமின்றி, ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுப் பணி, ஆக்கிரமிப்பு அகற்றம், திருவள்ளுர்-அரக்கோணம் இடையேயான நான்காவது இருப்புப் பாதை அமைக்கும் பணிக்கான நில ஆர்ஜிதம் உள்ளிட்ட பணிகளையும் நாங்களே மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆள்பற்றாக்குறை, அதிக மனுக்கள், கூடுதல் கிராமங்கள் போன்றவற்றால், பணிகள் தாமதம் ஆகின்றன. எனவே, கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.