திமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மண்புழு உரம் தயாரித்து வருவாய் ஈட்டும் மகளிர்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே குறைந்த முதலீட்டில் மண்புழு உரம் தயாரித்து நல்ல வருவாய் ஈட்டும் பணியில் ஒரு மகளிர் குழு ஈடுபட்டுள்ளது.   அரக்கோணம் வட்டம் காவேரிபாக்கம் வட்டாரத்தில் தண்டலம் கிராமத்தில் நாகவ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 9:30 am

எஸ்.சபேஷ்

அரக்கோணம்: அரக்கோணம் அருகே குறைந்த முதலீட்டில் மண்புழு உரம் தயாரித்து நல்ல வருவாய் ஈட்டும் பணியில் ஒரு மகளிர் குழு ஈடுபட்டுள்ளது.

  அரக்கோணம் வட்டம் காவேரிபாக்கம் வட்டாரத்தில் தண்டலம் கிராமத்தில் நாகவள்ளி தலைமையில் இந்த மகளிர் குழு செயல்பட்டு வருகிறது. அவர்கள் மண்புழுக்களை வளர்த்து அது உண்டு வெளியேற்றும் கழிவுகளை உரங்களாக விற்று வருகின்றனர். கிலோ ரூ. 6-க்கு விற்பதன் மூலம் மாதம் சுமார் ரூ. 10 ஆயிரம் வரை இம்மகளிர் சம்பாதித்து வருகின்றனர்.

  இது குறித்து நாகவள்ளி கூறியது: மண்புழு உரம் தயாரிக்க நல்ல வடிகால் வசதியுடன் கூடிய நிழற்பாங்கான இடமாக இருக்க வேண்டும். இது போன்ற இடம் எங்கள் கிராமத்தில் எங்களது பகுதியிலேயே இருக்கிறது. மேலும் அரசின் வேளாண் துறை அதிகாரிகள் எங்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அவர்கள் தெரிவித்தபடி 10 அடி நீளம், 3 அடி அகலம், 2 அடி உயரம் கொண்ட சிமென்ட் தொட்டிகளை கட்டினோம். மேலும் கொட்டகை அமைக்கவும் மற்ற செலவுகளுக்கும் தமிழக அரசின் மூலம் ரூ. 50 ஆயிரம் மானியம் கிடைத்தது என்றார்.

  இது குறித்து வேளாண்துறையின் உதவி இயக்குநர் வெ.ஜெயசந்திரன் கூறியது: மண்புழுக்கள் மக்கக்கூடிய அனைத்து வகை தாவரக் கழிவுகள், சாணம், குப்பை, கூளங்கள் போன்றவற்றை உண்டு நல்ல உரமாக மாற்றும் தன்மை கொண்டவை. குறைந்த செலவில் மண்புழு உரத்தை உற்பத்தி செய்து அதிக வருமானம் பெறலாம். வேலை பளுவும் குறைவு.

  மண்புழு உரம் தயாரிப்பதற்கு சாணம், அனைத்து வகை பயிர்க் கழிவுகள், கால்நடைக் கழிவுகள், இதர மக்கும் குப்பைகள் ஏற்றவை. இவை கிராம பகுதிகளில் எளிதாகக் கிடைக்கும். மேலும் கிராமங்களுக்கு அருகில் உள்ள நகராட்சிக் கழிவுகள், காய்கறி சந்தை கழிவுகளும் மண்புழு உர உற்பத்திக்கு ஏற்ற கழிவுப்பொருள்கள் ஆகும்.

  நன்கு மக்கிய பயிர்க் கழிவுகள் மற்றும் சாணத்தை மண்புழுக்களுக்கு உணவாக தருவதனால் ஒரு மாதத்திலேயே மண்புழு உரத்தை உருவாக்கி விடலாம்.

இதற்காக பயிர் கழிவுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்ட, "செட்டர்' என்ற கருவியை பயன்படுத்தலாம். இதை வாங்க வேளாண்துறை கடந்த ஆண்டு மானியம் அளித்தது.

  மேலும் தற்போது நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் தார்ப்பாய்களில் வீட்டு தோட்டத்திலும் மண்புழு உரம் தயாரிக்கும் செயல்விளக்கத் தளையை காவேரிபாக்கத்தில் பல இடங்களில் அமைத்துள்ளோம். இங்கு மிக குறைந்த முதலீட்டில் மண்புழு உரம் தயாரிக்க ஊக்கப்படுத்தி வருகிறோம் என்றார்.

  மேலும் ஆலோசனைகளை பெற காவேரிபாக்கம் வேளாண் துறை உதவி இயக்குநர் வெ.ஜெயசந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் க.திருக்குமார் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.