/

தேசிய அளவில் சிறந்த மருத்துவமனையாக சோளிங்கர் அரசு மருத்துவமனை தேர்வு

அரக்கோணம், மே 8:தேசிய அளவில் சிறந்த மருத்துவமனையாக சோளிங்கர் அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது. புதுதில்லியை சேர்ந்த நேஷனல் அக்ரிடேஷன் பார் ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:03 pm

எஸ்.சபேஷ்

அரக்கோணம், மே 8:தேசிய அளவில் சிறந்த மருத்துவமனையாக சோளிங்கர் அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுதில்லியை சேர்ந்த நேஷனல் அக்ரிடேஷன் பார் ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் தேசிய அளவில் சிறந்த மருத்துவமனையை தேர்வு செய்து தரச் சான்றுஅளித்து வருகிறது. தேசிய அளவில் பல தனியார் மருத்துவமனைகள் சிறந்த மருத்துவமனையாக இந்நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில் தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த அரசு மருத்துவமனைகளும் இப்போட்டியில் பங்கேற்கத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் 12 மருத்துவமனைகள் போட்டியிட்டன. இவற்றில் 4 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டன.இறுதியில் 4 பேர் கொண்ட குழு இருமுறை ஆய்வு மேற்கொண்ட பிறகு, வேலூர் மாவட்டம் சோளிங்கர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, நாமக்கல், நாகர்கோவில் மாவட்டம் கன்னியாகுமரி மருத்துவமனைகள் போட்டியில் தேர்வு செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து சோளிங்கர், நாமக்கல் ஆகிய இரு மருத்துவமனைகள் சிறந்த மருத்துவமனைகளாகத் தேர்வு செய்யப்பட்டன.

இதுகுறித்து சோளிங்கர் அரசினர் மருத்துவமனை தலைமை மருத்துவரும், சிறந்த அரசு மருத்துவமனை நிர்வாகியாக அரசால் தேர்வு செய்யப்பட்டவருமான டாக்டர்.நரசிம்மன் கூறியது:

எங்களது மருத்துவமனை தரச் சான்றிதழ் பெற தமிழக அரசால் தேர்வு செய்துஅனுப்பப்பட உள்ளதாக எங்களுக்கு தெரிவிக்கப்படுவதற்கு முன்பே, மருத்துவமனையில் மருத்துவர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருமே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். இத்தேர்வு எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தந்துள்ளது. எங்களது மருத்துவமனையில் லேப், எக்ஸ்ரே அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வரும் நோயாளிகள் குறித்த மருத்துவ நிலை தனி பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது.இதைத் தொடர்ந்து இந்த நோயாளிக்கு எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கமுடியுமா? அல்லது முடியாதா? என்பது குறித்து ஆரம்ப நிலையிலேயே தெரிவித்து விடுவோம்.

அரசு எங்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து தந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் மட்டும் எங்களுக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டு மருத்துவமனையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன.

நோயாளிகள் இறக்கும் தருவாயில் அவரது உயிரை சில நிமிடங்களாவது நீடிக்கச் செய்யும் டிப்ரிலேட்டர் என்ற உயிர்காக்கும் கருவி எங்களது மருத்துவமனையில் உள்ளது.

மேலும் எங்களது மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் பல வசதிகளைக் கொண்டது. அவசர சிகிச்சை பிரிவும் நவீனமயமாக்கப்பட்ட நிலையில் உள்ளது. மருத்துவமனையில் உடல் ஊனமுற்ற நோயாளிகளுக்கென சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

டாக்டர் நரசிம்மனின் சிறந்த பணிக்காக மகாராஷ்டிர அரசு பாராட்டு தெரிவித்துள்ளதோடு, அங்கிருக்கும் அரசு மருத்துவமனை நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க அவரை மும்பைக்கு அழைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.