தொடர் மழையால் வைக்கோல் விலை வீழ்ச்சி

கிருஷ்ணகிரி, நவ. 18: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையால் வைக்கோல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், ஆவத்துவாடி, பையூர்

கிருஷ்ணகிரி, நவ. 18: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையால் வைக்கோல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம், ஆவத்துவாடி, பையூர், அவதானப்பட்டி, பெரியமுத்தூர், காவேஅள்ளி, மிட்டஅள்ளி, சுண்டேகுப்பம், அரசம்பட்டி, திம்மாபுரம், மூங்கில்புதூர், செம்மண்டகுப்பம், மாதேப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 21,750 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

 நெல் அறுவடைக்கு பின்னர் பதப்படுத்தப்பட்ட வைக்கோல்கால்நடைகளுக்கு தீவனமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக மேட்டுப்பகுதிகளான ஊத்தங்கரை, மத்தூர், வேப்பனப்பள்ளி, ராயக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாப்பாரப்பட்டி, மொரப்பூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கும் வைக்கோலை கால்நடைகளுக்காக வாங்கிச் செல்கின்றனர்.

 கடந்த ஆண்டு மழை பொய்த்துவிட்டதால் கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தது. ஒரு டிராக்டர் வைக்கோல் ரூ. 4 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைத்தது.

 கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சாராசரி மழையளவு 830.5 மில்லி மீட்டர். நிகழாண்டில் இதுவரை 923.33 மி.மீ. மழை பெய்துள்ளது. மேலும் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அறுவடை செய்த நெற்பயிரை வெயிலில் உலர்த்தும் பணியும் பாதிக்கப்படுள்ளது.

 மேலும் மேட்டு நிலங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளதால், வயல்காட்டில் அதிகமாக புற்கள் முளைத்துள்ளன. இதனால் கால்நடைக்கு தீவனமாக பயன்படும் வைக்கோலின் தேவை குறைந்துள்ளது. தற்போது ஒரு டிராக்டர் வைக்கோல் விலை ரூ. 600-க்கும் குறைவாகவே விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

விலையேற வாய்ப்பு

 இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் கா.ராஜன் கூறியது:

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வைக்கோலுக்கான தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வைக்கோலை நல்ல வெயிலில் உலர்த்தி, இருப்பு வைத்தால் அதிக லாபத்தில் விற்க முடியும். மேலும், மாம்பழ கூழ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் மாங்காய்களை இயற்கையாக பழுக்க வைக்க வைக்கோல் தேவை அதிகரிக்கும். அப்போது நல்ல விலை கிடைக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com