ஆசிரியர்களுக்காக இயங்கும் பள்ளிகள்
அரக்கோணம், நவ.22: அரக்கோணம் சுற்றுவட்டப் பகுதிகளில் பல அரசுப் பள்ளிகள் சொற்ப மாணவர்களே உள்ள நிலையில் ஆசிரியர்களுக்காக நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேர


அரக்கோணம், நவ.22: அரக்கோணம் சுற்றுவட்டப் பகுதிகளில் பல அரசுப் பள்ளிகள் சொற்ப மாணவர்களே உள்ள நிலையில் ஆசிரியர்களுக்காக நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, காவேரிபாக்கம் வட்டாரங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே வந்து சேர்கின்றனர். இதனால் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மாற்றப்படுவார்கள் என்பதால் போலியான வருகைப் பதிவேடுகள் பராமரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் முதல் வகுப்பில் இந்த ஆண்டு 13 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக வருகை பதிவேட்டில் இருந்தாலும் 4 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனராம். வருகைப் பதிவேட்டில் உள்ள மீதி 9 மாணவர்கள் வேறு ஒரு பள்ளியில் படிப்பவர்களாம்.
ஆய்வுக்காக அதிகாரிகள் வருவது முன்கூட்டியே தெரிந்து விடுவதால் அந்த நாளில் மட்டும் அந்த மாணவர்களை அழைத்து வந்து உட்கார வைத்துவிடுவார்களாம். மேலும் கிராமத்தில் திருவிழா, பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லை, பள்ளிக்கு வந்த பிள்ளைகளை பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர் என பல்வேறு காரணங்களை ஆசிரியர்கள் தெரிவித்துவிடுவார்களாம்.
அதே போல அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இன்னொரு பள்ளியில் இந்த ஆண்டு ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்தாராம். மேலும் சில பள்ளிகளிலும் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மட்டுமே மாணவர் சேர்க்கை இருந்துள்ளது. அப்பள்ளிகளிலும் போலி வருகைப் பதிவேடுகள் பராமரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் மாறுதல் பெறாமல் இருப்பதற்காகவே இந்த போலி வருகைப் பதிவேடுகள் பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் அரசுக்கு பெருமளவு நிதி இழப்பு ஏற்படுவதோடு, சத்துணவு நிதியும் தவறாகப் பயன்படுத்தப்படும் நிலை உள்ளது.
இது குறித்து அரக்கோணம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சரவணன் கூறியது: இந்த ஆண்டு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது உண்மைதான். குறிப்பிட்ட அந்த பள்ளியில் ஒரு மாணவர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார் என்பது எங்களுக்கு ஏற்கெனவே தெரியவந்துள்ளது. ஆனாலும் பல பள்ளிகளில் போலி வருகைப் பதிவேடு பராமரிக்கப்படுவது தற்போது தான் தெரியவந்துள்ளது. இப்பள்ளிகள் அனைத்துமே கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பட்டியலில் வருபவை என்றார் அவர்.
கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோவிந்தசாமி கூறியது: பள்ளிகளில் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆய்வின்போது ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களைத் தெரிவிக்கின்றனர். இது குறித்து விரிவான ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.
இது குறித்து பள்ளி கல்வித்துறை உரிய ஆய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கையை உயர்த்த போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போல போலி வருகைப் பதிவேடுகளை பராமரிக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...