ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் என்பவர் அமோக விளைச்சலை தரும் புதிய ரக நெல்லை கண்டுபிடித்தார். இந்நெல்லுக்கு அரசு அங்கீகாரம் தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் எஸ்.எஸ்.எல்.சி. வரை முடித்துள்ளார்.
அப்போதே அவருக்கு அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம். வறுமையின் காரணமாகவும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் படிப்பை தொடர முடியாமல் தீவிர விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குண்டு நெல் விலை போகவில்லை என்று விவசாயிகள் கவலையில் இருந்தனர்.
இதனால் பூங்காவனம் நெல் வகைகளில் புதியதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினார். பின்னர் பொன்னி, ஐ.ஆர் 50 ஆகிய இரண்டு நெல்லில் இருந்து மகரந்த சேர்க்கையை உருவாக்கி அதன் மூலம் புதிய நெல்லை கண்டுபிடித்தார்.
750 கிராம் நெல்விதையை நாற்று விட்டு 25 நாளில் மூன்று சென்ட்டில் நடவு செய்தார். இதை 105 நாளில் அறுவடை செய்தபோது 75 கிலோ நெல் அறுவடை செய்துள்ளார். இதனால் ஒரு ஏக்கருக்கு 38 முதல் 40 மூட்டை வரை
நெல் மகசூல் செய்ய முடியும் என்று தெரிவித்தார். இந்த புதிய ரக நெல்லுக்கு தன்னுடைய பெயரிலிருந்து பூங்கா என்ற வார்த்தையை பயன்படுத்தி பூங்கா பொன்னி என்று பெயரிட்டார்.
இந்த பூங்கா பொன்னி நெல், பொன்னியை விட சன்னமாகவும், அதிக மகசூல் தரக்கூடிய நெல் ரகமாகவும் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்நெல் வகையை 1990-ம் ஆண்டு கண்டுபிடித்தார். 1991-ம் ஆண்டு பெரணமல்லூர் எம்எல்ஏ ஏ.கே.சீனிவாசன் மூலமாக அப்போதைய விவசாய அமைச்சர் கு.ப.கிருஷ்ணனிடம் பூங்காவனத்தை அறிமுகம் செய்துவைத்தார். அவர் புதிய ரக நெல்லை பார்வையிட்டு பூங்காவனத்தை பாராட்டினார்.
மேலும் இந்த வகை நெல்லை விவசாய அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பி இது குறித்து அறிக்கை அனுப்பும்படி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
1992-ம் ஆண்டு இந்த நெல்லை விவசாயிகளுக்கு பூங்காவனம் அறிமுகப்படுத்தினார். பின்னர் இதன் காரணமாக வேளாண்மை நிபுணர்கள் குழுவைச் சேர்ந்த ஆராய்ச்சி நிலைய தலைவர் எஸ்.வைரவன், உதவி பேராசிரியர் நீலகண்டபிள்ளை, வேளாண்மை துணை இயக்குநர் ராபர்ட் ராஜசேகரன், உதவி இயக்குநர் தே.பாஸ்கர், சேத்துப்பட்டு விரிவாக்க மைய வளர்ச்சி அலுவலர் ஷ்யாம்சந்த்காம்தாஸ் ஆகியோர் பூங்காவனம் கண்டுபிடித்த புதிய நெல்வகை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர் இது குறித்த சரியான தகவலை தெரிவிக்காமல் விட்டனர்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் வகை விலைப்பட்டியலில் பூங்கா பொன்னி என்ற பெயர் சில ஆண்டுகளுக்கு முன் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆரணி உதவி வேளாண்மை இயக்குநர் செல்வராஜிடம் கேட்டதற்கு, பூங்காவனம் கண்டுபிடித்த நெல் குறித்து சரியான விளக்கம் தரவில்லை. மேலும் இது வெள்ளைப்பொன்னி அரிசியை ஒத்துப்போவதால் வேளாண்மைத்துறை இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறது என்றார்.
வேளாண்மை பேராசிரியர் ஜி.சங்கரிடம் கேட்டதற்கு, பூங்காவனம் கண்டுபிடித்த நெல் வகை உண்மையிலேயே நல்ல தரமானது. இது அதிக விளைச்சல் தரும் நெல் வகை ஆகும். வேளாண்மைத்துறையினர் ஆராய்ச்சிப்பண்ணைகள்
மூலம் இந்த நெல்வகையை தமிழகம் முழுவதும் பயிரிட்டு ஆய்வு செய்து பூங்காபொன்னி என்ற பெயருக்கு அனுமதி தரவேண்டும். இதுகுறித்து பூங்காவனம் வேளாண்மைத்துறையிடம் சரியான அணுகுமுறையில் இருந்தால் வெற்றி பெறலாம் என்று தெரிவித்தார்.
விவசாயி பூங்காவனம் கூறியது: நான் கண்டுபிடித்த நெல் வகையை சேத்துப்பட்டு பகுதி முழுவதும் பயிரிட்டு வருகின்றனர். இது நல்ல விளைச்சலை தருவதால் காஞ்சிபுரம், வேலூர், ஆரணி பகுதி விவசாயிகளும் இந்த வகை நெல் விதையை கேட்டு வாங்கிச்செல்கின்றனர். ஆனால் நான் ஏழையாக இருப்பதால் அரசு இந்த வகை நெல்லுக்கு அங்கீகாரம் வழங்காமல் இருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து எனக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.