/

மக்காச்சோளம் மகசூல் அதிகரிக்க ...

அரக்கோணம்: மக்காச்சோளம் விவசாயத்தில் மகசூல் அதிகரிக்க தற்போது சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதால் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என வேளாண்மை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.   ம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:43 pm

எஸ்.சபேஷ்

அரக்கோணம்: மக்காச்சோளம் விவசாயத்தில் மகசூல் அதிகரிக்க தற்போது சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதால் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என வேளாண்மை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

  மக்காச்சோளம் தமிழகத்தில் சுமார் 2 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.  பருவமழை குறைந்த இடங்களில் அதிகநீர் தேவைப்படும் நெல் பயிருக்கு பதிலாக மாற்று பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம்.

  மக்காச்சோளம் உற்பத்தி திறனை பார்க்கும்போது தற்போது சராசரியாக ஹெக்டேருக்கு 1,500 கிலோ அளவில் மகசூல் கிடைக்கிறது. 2009-10 ஆண்டில் மக்காச்சோளம் சாகுபடி 3 லட்சம் ஹெக்டேருக்கு அதிகரிக்கவும், உற்பத்தியை ஹெக்டேருக்கு 5ஆயிரம் கிலோ அளவில் அதிகரிக்கவும் வேளாண்மை துறை பல்வேறு மானிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

  ஏரிப்பாசன பகுதி (நஞ்செய்) விவசாயிகளுக்கு ரூ. 4 ஆயிரம் மானியத்தில் ஒரு ஹெக்டோó பயிரிட விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன. வரும் தை பட்டமான ஜனவரி-பிப்ரவரி மக்காச்சோளம் சாகுபடிக்கு உகந்த காலம்.

  கோ 1, கோ எச் (எம்) 5 ஆகிய ரகங்கள் பயிரிட ஏற்றவை. ஒரு ஹெக்டேருக்கு வீரிய ஒட்டு ரகங்கள் ஹெக்டேருக்கு 15 கிலோ கிராம் இடலாம்.

  குருத்து ஈ,  தண்டுபுழு போன்ற பூசசிகளை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி குளோரிபைரிபாஸ் (அ) மானோ குரோட்டோபாஸ் (அ) பாசலோன் மருந்து கலக்கலாம்.

  அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் (அ) கார்பன்டைசிம் கலக்கலாம். நுண்ணுயிர் நேர்த்திக்கு ஒரு கிலோ விதைக்கு 200 கிராம் கொண்ட பாக்கெட் அசோஸ்பைரில்லம்  கலந்து 24 மணி நேரத்திற்குள் விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் இட்டு நன்கு உழவுமேற்கொள்ள வேண்டும்.

  மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிட வேண்டும் அல்லது ஏக்கருக்கு 54:25:20 கிலோ முறையில் தழை, மணி, சாம்பல் சத்து இடவேண்டும். இதில் அடியுரமாக ஏக்கருக்கு முறையே 13.5:25:20 கிலோ தழை மணி சாம்பல் சத்து இடவேண்டும்.

  நடவு வயலில் ஏக்கருக்கு 4 பாக்கெட் (800 கிராம்) அசோஸ்பைரில்லம், 4 பாக்கெட் (800 கிராம்) பாஸ்போபேக்டிரியா நுண்ணுயிர் உரத்தை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து சீராக தூவ வேண்டும்.

  ஏக்கருக்கு 5 கிலோ சிறுதானிய நுண்ணூட்டச் சத்து உரத்தை மணல் (அ) மக்கிய  தொழு உரத்துடன் கலந்து விதைக்க வேண்டும்.

  பயிருக்கு பயிர் 20 செ. மீட்டரும், வரிசைக்கு வரிசை 60 செ. மீட்டரும் அதாவது ச.மீட்டரில் 8 செடிகள் அதாவது ஒரு ஏக்கரில் 32 ஆயிரம் செடிகள் இருக்குமாறு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும்.

  முதல் மேலுரமாக விதைத்த 25-வது நாள் ஏக்கருக்கு 27 கிலோ தழைச்சத்து இட வேண்டும். பின்பு இரண்டாம் மேலுரமாக விதைத்த 45-வது நாள் 13.5 கிலோ தழைசத்து இட வேண்டும்.

  விதைத்த 30-ம் நாள் ஏக்கருக்கு 5 எண்கள் கருவாட்டுபொறி வைத்து குருத்து ஈயை கட்டுப்படுத்தலாம். இரவு நேரங்களில் விளக்குப்பொறி வைத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். பாதிப்பு ஏற்பட்ட செடிகளை களைந்து எரித்து விட வேண்டும்.

  இந்த ஆலோசனைகளை கடைபிடித்தால் ஏக்கருக்கு ரூ. 4ஆயிரம் செலவு ஏற்படும். வருவாய் ரூ.12 ஆயிரம் கிடைக்கும்.

  இதுகுறித்த விவரங்கள் தேவைப்படுவோர் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வேளாண்மை அலுவலகங்களை அணுகலாம் என வேளாண்துறை காவேரிபாக்கம் உதவி இயக்குநர் வெ.ஜெயச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் திருக்குமரன் ஆகியோர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.