குடியாத்தம், அக். 2: குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணை நீரை முன்னுரிமை அடிப்படையில் ஏரிகளுக்குப் பங்கீடு செய்து, சட்ட வரையறை வெளியிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
அணை திறப்பு விழா முடிந்து 10 ஆண்டுகளாகியும் அணை நீரை ஏரிகளுக்கு பங்கீடு செய்து அரசாணைப் பிறப்பிக்கப்படாமல் உள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடியாத்தம் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள மோர்தானா கிராமத்தில் சுமார் |100 கோடியில் கட்டப்பட்ட அணையை 2.9.2000-ல் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
19 ஏரிகளுக்கு பாசன வசதி!
இந்த அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சுமார் 5 கி.மீ. தொலைவில் ஜங்காலபள்ளி அருகே கட்டப்பட்டுள்ள செக்டேம் வழியாக வலது, இடது கால்வாய்கள் மூலமும், கௌன்டன்யா ஆற்று வழியாகவும் ஏரிகளுக்குச் செல்லும். வலதுபுறக் கால்வாய் மூலம் அக்ராவரம், பெரும்பாடி, செருவங்கி, இறையன்காடு, ஒக்கனாபுரம் உள்ளிட்ட 12 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. 43.50 கி.மீ. தூரம் செல்லும் இக்கால்வாய் வேலூர் அருகே சதுப்பேரியில் முடிகிறது.
இடதுபுறக் கால்வாய் மூலம் அம்மணாங்குப்பம், வேப்பூர், நெட்டேரி, பசுமாத்தூர் ஏரி, காவனூர் ஏரி உள்ளிட்ட 7 ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. 32.25 கி.மீ. தூரம் செல்லும் இக்கால்வாய் லத்தேரி அருகே உள்ள பனமடங்கி ஓடையில் கலக்கிறது. இவ்விரு கால்வாய்கள் மூலம் 8,367 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.
ஆந்திரம் செக் டேம்களை கட்டியது!
ஆந்திர மாநிலம் புங்கனூர் அருகில் தொடங்கும் ஆற்றிலிருந்து மோர்தானா அணைக்கு தண்ணீர் வருகிறது. மோர்தானா அணை கட்டத் தொடங்கியதும், ஆந்திர மாநில அரசு அம்மாநில வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட செக்டேம்களை கட்டியுள்ளது.
சில ஆண்டுகளாக மழை பொய்த்ததாலும், வழியில் செக்டேம்கள் கட்டப்பட்டதாலும் மோர்தானா அணைக்கு எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரவில்லை.
10 ஆண்டுகளில் 4 முறையே அணை நிரம்பியது!
அணை திறக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 2000, 2001, 2005, 2008 ஆகிய ஆண்டுகளில் 4 முறை மட்டுமே அணை முழுவதும் நிரம்பி வழிந்தது.
இதனால் எதிர்பார்த்தபடி ஏரிகள் மூலம் பாசனத்துக்குத் தண்ணீர் விட முடியவில்லை. இதனால் காலம், காலமாக இந்த நீராதாரத்தை நம்பியிருந்த செருவங்கி, வேப்பூர், நெட்டேரி ஆகிய ஏரிப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும், கௌன்டன்யா ஆற்றுப் பகுதி விவசாயிகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து முன்னோடி விவசாயி தாழை. ராமாபுரத்தைச் சேர்ந்த எம். ராமலிங்கம் கூறியது: அணை கட்டி முடிந்ததும், அணைநீர் பங்கீட்டை வரையறுத்து, அரசாணை பிறப்பித்திருக்க வேண்டும். அதிகாரிகள் அதை செய்யாததால் காலம், காலமாக இந்த நீரை நம்பியிருந்த நாங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளோம். பங்கீடு வரையறை போக உபரிநீரை எந்தப் பயன்பாட்டுக்கு வேண்டுமானாலும் அதிகாரிகள் கொண்டு செல்லலாம் என்றார்.
இதுதொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியது:
அணைநீர் குறித்து ஆய்வுசெய்து பங்கீடு அறிக்கையை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் அதற்கான அரசாணை கிடைக்கும் என்றனர்.
நகருக்கு வருமா அணை நீர்?
கௌன்டன்யா ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துவிட்டதாலும், செருவங்கி ஏரியில் நீர் நிரம்பி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் குடியாத்தம் நகரில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இங்குள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்குநாள் குறைந்து வருகிறது.
இதனால், மோர்தானா அணையிலிருந்து பாக்கம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து, அங்கிருந்து பைப்லைன் மூலம் குடியாத்தம் நகருக்கு குடிநீர் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளது. இத்திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்பது குடியாத்தம் நகர மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.