/

பொருளாதாரப் புகார்களும், பொறியில் சிக்கும் ஆய்வாளர்களும்

அரக்கோணம், செப். 24: அரக்கோணம் காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகார்களில் சிக்கிக் கொள்ள பொருளாதாரக் குற்றப் புகார்களே காரணம் என்று கூறப்படுகிறது. அரக்கோணம் நகரம் மற்றும்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 6:04 pm

எஸ்.சபேஷ்

அரக்கோணம், செப். 24: அரக்கோணம் காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகார்களில் சிக்கிக் கொள்ள பொருளாதாரக் குற்றப் புகார்களே காரணம் என்று கூறப்படுகிறது.

அரக்கோணம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நில பேர வர்த்தகங்களும், கந்து வட்டியும் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. கிராமங்களில் தங்களுடைய சொந்த நிலங்களை விற்றுவிட்டு அந்தப் பணத்தை கையிருப்பாக வைத்துக்கொண்டு நகரில் வாழும் பெரும்பான்மையோர் இந்த வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த வர்த்தகங்கள் அதிக அளவில் நடைபெறும்போதும், குறிப்பாக குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி சில மாதங்களில் உடனே அதை அதிக விலைக்கு விற்கும் போதுதான் இந்த வர்த்தகங்களில் குற்றசெயல்கள் ஆரம்பமாகின்றன. மேலும் அரக்கோணம் பகுதியில் பலர் இன்று வட்டிக்கு விடும் தொழிலை சர்வ சாதாரணமாக செய்து வருகின்றனர். அதிலும் கேட்டவுடன் பணம் என்றநிலையில் அதிக வட்டிக்கு பணம் பெறுபவர்கள், பணம் அளித்தவர்களும் இந்த குற்ற நடவடிக்கைகளில் சிக்குகின்றனர்.

 இத்தகைய குற்ற நடவடிக்கைகளில் பாதிப்பிற்குள்ளாவோர் காவல்நிலையங்களில் புகார்களை நேரடியாக அளிக்காமல் அரசியல்வாதிகளையும் அழைத்து கொண்டு வருகின்றனர். இந்த இடைத்தரகு அரசியல்வாதிகள் காவல்துறையினருக்கு ஆசைவார்த்தைகள் காட்டுகின்றனர். புகாரை மட்டும் வாங்கிக் கொண்டு விசாரணை செய்யுங்கள், பணம் வந்துவிட்டால் குறிப்பிட்ட சதவீதத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்கின்றனர். இந்த ஆசைவார்த்தைகளுக்கு சிக்கும் காவல் அதிகாரிகள் தவறுகளை செய்யத் துணிகின்றனர்.

 கடந்த சில மாதங்களுக்கு முன் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த தில்லையர்க்கரசி, தன்னிடம் வந்த புகாரை குற்றவாளிக்கு ஏற்றப்படி விசாரணை செய்ய புகார்தாரர் விற்று வந்த மனைப்பிரிவில் ஒரு மனையை கேட்டு பெற்று அதை பதிவும் செய்துகொண்டதாக புகார் ஏற்கப்பட்டு அதன் பேரில் ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

 இதைத் தொடர்ந்து அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்தில் தன்னிடம் வந்த பணமோசடி புகார் சம்மந்தமாக நடைபெற்ற விசாரணையில் புகார்தாரரான வட்டிவர்த்தகத்தில் ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரிடம்  அவரை மிரட்டி பல லட்சம் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் அக்காவல் நிலைய ஆய்வாளர் ஜோதிமணி திருநெல்வேலி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

 தற்போது வட்டி அதிகமாகத் தருவதாக ஆசைவார்த்தை கூறி நகரில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் மீது பலர் புகார் அளித்திருந்த நிலையில் அப்பெண்ணை பிடித்து நடவடிக்கை எடுக்கவேண்டிய பொறுப்பில் இருந்த நகர காவல் ஆய்வாளர் செந்தில், அப்பெண்ணை தப்பிக்க வைத்து அவரிடம் பல லட்சம் லஞ்சமாக பெற்றதாக செந்திலை மாவட்ட கட்டுபாட்டு அறைக்கு மாற்றியது காவல் துறை.

 இந்த அதிகாரிகள் சிக்கியது எல்லாவற்றுக்குமே காரணம் பொருளாதார குற்றங்கள் தான். தற்போது அரக்கோணம் உட்கோட்ட காவல் பகுதிகளில் இந்தவகை குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுவதால் இவற்றை விசாரிக்க தனிக்குழுவை ஏற்படுத்தி இந்த புகார்களை இக்குழுவினர் மட்டுமே விசாரணை செய்ய ஏற்பாடு செய்தால் மட்டுமே காவல் நிலையங்களே கட்டப்பஞ்சாயத்து நிலையமாக மாறுவதைத் தடுக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.