ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மூச்சுத்திணறுகிறது செய்யாறு நகரம்

செய்யாறு, பிப்.11: செய்யாறு காந்தி சாலை மண்சாலையாக மாறி, புழுதி பறப்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.   செய்யாறு நகரின் பிரதான சாலை காந்தி சாலையாகும். இந்த சாலை வழியாகத்தான் திரு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:22 am

தே.சாலமன்

செய்யாறு, பிப்.11: செய்யாறு காந்தி சாலை மண்சாலையாக மாறி, புழுதி பறப்பதால் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

  செய்யாறு நகரின் பிரதான சாலை காந்தி சாலையாகும். இந்த சாலை வழியாகத்தான் திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகளுக்கும், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன.

  காந்தி சாலை நகரின் பிரதான சாலை என்பதால் துணிக்கடை, நகைக்கடை, காய்கறிக் கடை, மளிகைக் கடை, ஓட்டல் என ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் இங்கே இடம்பிடித்துள்ளன. இதனால் பொதுமக்கள் நெரிசல் எப்போதும் இருக்கும்.

  சமீபத்தில் பெய்த மழையில் இந்த சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது. போக்குவரத்துக்கு தகுதியில்லாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

  இந்நிலையில் இந்த சாலையை சீரமைக்க கோரி அனைத்து வியாபாரிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் டெண்டர் விடப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். தமிழக அரசுக்கு மனு அனுப்பினர்.

  இதைத் தொடந்து பொங்கல் பண்டிகைக்கு முன் ஒப்பந்ததாரர், பஸ் நிலையம் அருகில் இருந்து தட்டாரத் தெரு வரை ஆழப்படுத்தி மண் கொட்டி சமன் செய்தார். மண் கொட்டி ஒரு மாதத்துக்கு மேலாகியும் பணி தொடங்கப்படவில்லை.

  இதனால் கொட்டப்பட்ட மண் புழுதியாக மாறியது. வாகனங்கள் செல்லும் போது இந்த புழுதி பறப்பதால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். பலருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது. புழுதியால் அவதிக்கு ஆளாகும் அவர்கள் முகமூடி அணிந்தே தினசரிப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

  மேலும் இந்த புழுதி, சாலை ஓரம் உள்ள காய்கறிக் கடைகள், பழக் கடைகள், மளிகைக் கடைகள், ஓட்டல்களில் படிவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

  எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலைப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.