கோவை, ஜூலை 27: கோவையில் நடந்த திமுக பொதுக்குழு எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் முடிந்துவிட்டதாக பெருமைப்பட்டுக் கொண்டாலும், தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கும் பதிலேதும் தரப்படாமல் பொதுக்குழு முடிந்தது என்பதுதான் உண்மை.
கட்சி, குடும்பம், கூட்டணி எனப்படும் மூன்று விஷயங்களிலும் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று, பொதுக்குழு அறிவிக்கப்பட்டதில் இருந்து பரவலான எதிர்பார்ப்பு நிலவியது. கட்சியின் செயல்பாடுகளும், மூத்த நிர்வாகிகளின் நடவடிக்கைகளும் பரபரப்பை அதிகப்படுத்தியதோடு, மிகுந்து எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தின. ஆனால், பொதுக்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என கருதப்பட்ட எந்த விஷயத்துக்குமே முடிவு எடுக்கப்படாததால் தொண்டர்களுக்கு எஞ்சியது ஏமாற்றம் மட்டும்தான்.
அண்ணாவுக்குப் பிறகு திமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் கருணாநிதி. அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல், சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பொதுக்குழுவுக்கு முன்பு வரை நடந்த எந்தவொரு பொதுக்குழுவிலும் தலைமை குறித்து ஆழமான வாத-விவாதங்கள் இருந்ததில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கட்சிக்கு வழிகாட்டும் தலைவராக கருணாநிதி இருக்க வேண்டும். செயல் தலைவர் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் பெருவாரியான திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்கு இந்தப் பொதுக்குழு செயல்வடிவம் கொடுக்க இருந்த நிலையில், தென்மண்டல அமைப்புச் செயலர் அழகிரியின் எதிர்ப்பும், திமுக தலைவரின் தயக்கமும் அப்படி ஒரு முடிவை எடுக்கவிடாமல் தடுத்துவிட்டது என்று கூறப்படுகிறது.
பொதுக்குழுவில் பேசியவர்கள் பலரும் ஸ்டாலினுக்கு தலைமைப் பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். தலைமையும் அதைத் தான் விரும்பியது. ஆனால், அழகிரியை சமாதானப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு இவர் பேசினால் மறுபேச்சு இருக்காது என பொதுச்செயலர் அன்பழகனைப் பேச வைத்து சாதுர்யமாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்.
÷பொதுக்குழுவை சமாளித்துவிட்டதாக இருந்தாலும், குடும்பச் சண்டையில் கட்சியின் பெருவாரியான தொண்டர்களின் விருப்பம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதுதான் தொண்டர்களின் குமுறல்.
"88 வயதில் கட்சிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. அடுத்த பேரவைத் தேர்தலின்போது மேலும் அவர் முதுமை அடைந்திருக்கும் நிலையில், தேர்தல் பணிக்காகவும், வழிகாட்டவும் இடைப்பட்ட காலமான இந்த 5 ஆண்டுகளுக்குள் அடுத்த தலைவரை உருவாக்க வேண்டியது அவசியமானது. அழகிரி எதிர்க்கிறார் என்பதற்காக, இத்தனை ஆண்டுகளாக அடுத்த வாரிசு என்று அடையாளம் காட்டப்படும் ஸ்டாலினுக்கு பதவியில்லை என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியாக இல்லை' என்பது தொண்டர்களிடம் மட்டுமல்ல, கட்சியில் பல மூத்த தலைவர்கள் மத்தியிலும் காணப்படும் கருத்தாக இருந்தது.
"அழகிரியைச் சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தென்மண்டல அமைப்புச் செயலர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டது. மேற்கு மண்டலத்துக்கோ அல்லது வேறு மண்டலங்களுக்கோ அமைப்புச் செயலர்கள் கிடையாது. பிறகு எதற்காகத் தென் மண்டலப் பொறுப்பாளர் என்கிற பதவி? கட்சி என்பது குடும்பம் அல்ல, வாரிசுகளுக்கு சரிசமமாகப் பிரித்துக் கொடுக்க' என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
கட்சியைப் பலப்படுத்த தொகுதிக் குழு அமைக்கலாமா எனக் கேள்வி எழுப்பி, அதற்கான கருத்துக்களைத் தலைமை பெற்றது. அதனால், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் விவாதிக்கப்பட்டு, அதைச் சரிசெய்வதற்கான மாற்றங்கள் பொதுக்குழுவில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் இருந்தது.
ஜூலை 23, 24-ம் தேதிகளில் செயற்குழு, பொதுக்குழு கூட இருந்த நிலையில் அதற்கு முன்பே கருத்துக்களை அனுப்புமாறு கேட்டிருந்ததால், இதுபோன்ற பிரச்னைகளில் பொதுக்குழுவில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. செயற்குழுவிலும், பொதுக்குழுவிலும் வெளிப்படையாகச் சொல்ல விரும்பாதவர்கள் பலரும் மனக்குமுறல்களை கடிதம் மூலமாக அனுப்பியிருந்தனர்.
ஆனால், பொதுக்குழுவைத் துவக்கி வைத்துப் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "தேர்தல் தோல்வியால் மனம் புண்பட்டிருக்கிறேன்' என்று கூறி அதைப் பற்றி மீண்டும் பேசவேண்டாம் என்பதைப் போலத் தேர்தல் தோல்வி பற்றிய பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்பு நடத்தியதின் அடிப்படையில் மாற்றங்களுக்கான அறிவிப்புகள் இருக்குமா என்றால் அதுவும் இல்லை. கட்சியை அமைப்பு ரீதியாகப் பலப்படுத்துவதற்கான மாற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்க ஒரு குழுவை அமைத்து தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
÷பொதுக்குழுவில் பலரும் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசினார்கள். என்றாலும் செயற்குழுவில் விமர்சனங்கள் அதிகமாக இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்க அம்சம். செயற்குழு உறுப்பினர்கள் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள் என்பதன் அறிகுறிதான் இது என்று கருத்துத் தெரிவித்தார் முன்னாள் அமைச்சரும், மூத்த திமுக தலைவருமான ஒருவர்.
÷பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மத்தியில் மு.க. ஸ்டாலின் செயல் தலைவராக்கப்படவில்லை என்பதை கனத்த மனத்துடன் ஏற்றுக்கொண்ட பலரும்கூட, தலைமையுடன் கருத்து வேறுபாடு கொண்ட பிரச்னை, மாவட்டச் செயலாளர்கள் பற்றியது.
÷பல ஆண்டுகளாக ஒரு சிலர் மட்டுமே, ஏதோ குறுநில மன்னர்கள் போலவும், குத்தகைக்கு எடுத்தது போலவும் மாவட்டச் செயலாளர்களாகத் தொடர்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்பதுதான் பெருவாரியான உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது. இவர்களது குடும்பத்தினர் செய்த அடாவடிகள்தான் கட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்தி இருப்பதாகவும், அவர்களை மாற்றிவிட்டுப் புதியவர்கள் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று குரலெழுப்பப் பலரும் நினைத்திருந்தனர். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய், வாய்மூடி மௌனிகளாக இருந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
கடுமையான நெருக்கடி ஏற்பட்டபோதும், உதவி செய்யாத காங்கிரஸýடன் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் எழுப்பிய கேள்விக்கும், பொதுச்செயலர் அன்பழகன் மூலமாகவே அவர்களை அமைதிப்படுத்திவிட்டது திமுக தலைமை. கூட்டணியில் தொடருவோம் என்ற நிலையில் அமைச்சரவையில் நமக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைப் பெறலாமே என்று தலைமையிடம் அழகிரி கூறிய கருத்தும் ஏற்கப்படவில்லை.
"கூட்டணியில் இருந்து நம்மை வெளியேற்றும் வரை அதில் தொடருவோம், ஆனால், மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இரு இடங்கள் வெற்றிடமாகவே இருக்கும்' என்று பொதுக்குழுவில் கருணாநிதி அறிவித்துவிட்டார்.
ஆக, தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விடை தரப்படாமலேயே முடிந்துவிட்டது திமுகவின் பொதுக்குழு. கூடினார்கள், பிரிந்தார்கள், அவ்வளவே!
செவித் திறன் குறைபாட்டை
குணப்படுத்த முடியும்: டாக்டர் முரளிதரன்
சென்னை, ஜூலை 27: முறையான சிகிச்சையை மேற்கொண்டால் செவித் திறன்
குறைபாட்டை குணப்படுத்த முடியும் என்று சென்னை மருத்துவக் கல்லூரி காது - மூக்கு - தொண்டை துறை இயக்குநர் டாக்டர் ஏ. முரளிதரன் கூறினார்.
காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்களுக்காக -அறிவியல் தொழில்நுட்ம்- என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை அறிவியல் நகரத்தில் புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில் டாக்டர் முரளிதரன் பேசியதாவது:
மன அழுத்தத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய பாதிப்பாக காது கேளாமை பிரச்னை உள்ளது. இந்தியாவில் 5.3 கோடி பேருக்கு காது கேளாத பிரச்னை உள்ளது.
போதிய விழிப்புணர்வு, கல்வி இல்லாததே இந்த பாதிப்பு தொடர்வதற்கு காரணம். முறையான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், செவித் திறன் குறைபாட்டை 50 சதவீதம் குறைக்க முடியும் என்றார்.
அறிவியல் நகர துணைத் தலைவர் வி.கே. சுப்புராஜ் பேசியது:
இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களில் 6 சதவீதம் பேருக்கு செவித் திறன் குறைபாடு பிரச்னை உள்ளது. இவர்களில் 80 சதவீதம் பேருக்கு ஓரளவு பாதிப்பும், 20 சதவீதம் பேருக்கு மிக அதிக பாதிப்பும் உள்ளது.
இதுபோல் பிறக்கின்ற குழந்தகளில், பெரும்பாலான குழந்தைகள் செவித்திறன் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இளம் வயதிலேயே இந்த குறைபாட்டை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளித்தால், அதை குணப்படுத்திவிட முடியும்.
இந்த குறைபாட்டைப் போக்குவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன. எனவே, வரும் காலங்களில் இந்த குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.