லாபம் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி
செய்யாறு: உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமான நிலக்கடலை விதைகளை உற்பத்தி செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஹைதராபாத் மித வெப்ப மண்டல பயிர்களுக்கான பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கோயம்புத்தூர் தம


செய்யாறு: உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமான நிலக்கடலை விதைகளை உற்பத்தி செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஹைதராபாத் மித வெப்ப மண்டல பயிர்களுக்கான பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவை யோசனை தெரிவித்துள்ளன.
வகைகள்:
கரு விதை, வல்லுநர் விதை (100 விழுக்காடு இனத்தூய்மை), ஆதார விதை, சான்று விதை என 4 வகை விதைகள் உள்ளன. கரு விதை மற்றும் வல்லுநர் விதை இரண்டும் வல்லுநர்களின் மேற்பார்வையில் ஆராய்ச்சி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆதார விதை மற்றும் சான்று விதை அரசு விதைப்பண்ணைகளிலும், விவசாயிகளின் வயல்களிலும் வேளாண் துறை அலுவலர்களின் கண்காணிப்பில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
விதைத் தேர்வு:
விதைகளை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களான வேளாண்மை பல்கலைக்கழகங்கள், மாநில விதை நிறுவனங்கள், மத்திய விதை நிறுவனங்கள், வேளாண் துறை மற்றும் பதிவு பெற்ற தனியார் விதை நிறுவனங்கள் இவைகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து பெற வேண்டும்.
பெறப்பட்ட விதைகளை காற்றோட்டமுள்ள உலர்ந்த அறைகளில் சேமிக்க வேண்டும். உடைந்த, நிறம் மாறிய, சுருங்கிய சிறிய பருப்புகளை பிரித்து எடுத்து விட்டு நல்ல தரமான விதைகளையே உபயோகிக்க வேண்டும்.
பட்டம்:
மார்கழி பட்டம் (நவம்பர் - மார்ச்) நல்ல மகசூல் தரவல்லது. ஆனால் அறுவடையின் போது நிலவும் கோடை வெப்பத்தில் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்க வாய்ப்புள்ளதால் போதுமான முன்னெச்சரிக்கையுடன் விதைகளை உலர்த்த வேண்டும்.
நிலத்தை தேர்ந்தெடுத்தல்:
நல்ல வளமான, நீர் ஆதாரத்துக்கு அருகில் உள்ள, சமமான, நல்ல வடிகால் வசதி உள்ள, மணற்பாங்கான நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமானது முந்தைய இரண்டு பட்டங்களில் நிலக்கடலை பயிரிடப்படாததாக இருத்தல் வேண்டும்.
பயிர் விலகு தூரம்:
ஒரு ரகத்துக்கும் மற்றொரு ரகத்துக்கும் குறைந்த அளவு 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
நிலத்தை தயார் செய்தல்:
சுமார் 15 - 20 செ.மீ. ஆழம் வரை நல்ல புழுதி இருக்கும்படி நன்றாக உழுதுகொள்ளவேண்டும். சமதள பாத்திகளை விட ஆழச்சால் அகலப் பாத்திகள் விதை உற்பத்திக்கு சிறந்தது.
உர நிர்வாகம்:
நிலக்கடலைக்கு முந்தைய பயிருக்கு நல்ல உரமிட்டிருந்தால் எஞ்சிய சத்துகளை நிலக்கடலை எடுத்துக் கொள்ளும். மண்ணின் கார, அமிலத்தன்மையை நிர்ணயிக்கக் கூடிய டஏ அளவு 6.0 முதல் 6.3 என்ற அளவில் இருத்தல் வேண்டும்.
அடியுரமாக மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் ஹெக்டேருக்கு 12.5 டன்கள் இட வேண்டும். மண் ஆய்வு செய்து அதன்படி ரசாயன உரமிடுதல் சிறந்தது. மண் பரிசோதனை செய்ய இயலாத நிலையில், ஹெக்டேருக்கு 17:35:50 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரக்கூடிய அளவில் ரசாயன உரங்களை இடலாம்.
விதை நேர்த்தி:
விதைப்பதற்கு 1-2 நாள்கள் முன்னதாக தரமான நிலக்கடலை பருப்புகளுடன் ஒரு கிலோ விதைக்கு திரம் 2 கிராம் (அல்லது) கார்பெண்டசிம் 2 கிராம் (அல்லது) டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.
விதைப்பு:
ஒரு குழியில் ஒரு விதை மட்டுமே விதைக்க வேண்டும். விதைகளை 5 செ.மீ. ஆழத்துக்கு மிகாமல் விதைக்க வேண்டும். விதைக்கும் போது மண்ணில் போதுமான ஈரம் இருத்தல் வேண்டும்.
நீர் நிர்வாகம்:
பாசனத்துக்குத் தெளிப்பான்களை உபயோகிப்பதே சிறந்தது. விதைகள் முளைத்த பின் பூக்கும் பருவத்துக்கு இடைப்பட்ட காலத்தில் பயிரைச் சற்று காய விட வேண்டும். இதனால் செடிகளில் தேவையற்ற வளர்ச்சி கட்டுப்படுத்தப்படுவதுடன் நோய்களின் தாக்குதலும் குறைவாக இருக்கும்.
விழுதுகள் பூமியில் இறங்கிய பின் நிலத்தில் போதுமான ஈரம் இருக்குமாறு லேசான நீர்ப்பாசனம் தொடர்ந்து கொடுக்க வேண்டும். நிலத்தில் பாசன நீரோ, மழை நீரோ தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
களை நிர்வாகம்:
நிலக்கடலை விதைத்த உடன் ப்ளுக்குளோரலின் (அ) பென்டிமெத்தலீன் 2 லிட்டர் என்ற அளவில் களைக்கொல்லி இட்டுக் களைகளைக் கட்டுப்படுத்தலாம். விதைத்த பின் சுமார் 30 நாள்களில் கைக்களை எடுக்க வேண்டும்.
விதைத்த சுமார் 45 நாள்களில் ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும்.
நிலக்கடலை பயிருக்கு தேவையான சுண்ணாம்பு மற்றும் கந்தகச் சத்தை அளிக்க அடியுரமாக ஹெக்டேருக்கு 200 கிலோ ஜிப்சம், மேலும் விதைத்த 45-வது நாளில் 200 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும்.
ஊட்டச் சத்துக் கரைசல் தெளித்தல்:
மகசூலை அதிகரிக்க விதைத்த 25 மற்றும் 35-ம் நாள்களில் பூக்கும் தருணத்தில் ஊட்டச்சத்து தெளிக்கவும். ஹெக்டேருக்கு டிஏபி 2.5 கிலோ, அமோனியம் சல்பேட் 1 கிலோ, போரிக் அமிலம் (போராக்ஸ்) 500 கிராம், பிளானோபிக்ஸ் (பயிர் ஊக்கி) 440 மி.லி., தண்ணீர் 500 லிட்டர் இவைகளைக் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு:
பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் தென்பட்ட உடன் பரிந்துரைக்கப்படும் பூச்சி மற்றும் பூஞ்சாணக் கொல்லி மருந்துகளை தெளித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.
சாறு உறிஞ்சும் பூச்சிகளான இலைப்பேன், தத்துப்பூச்சி, அசுவிணி பூச்சிகளுக்கு இமிடாகுளோப்ரிட் 200 எஸ்.எல். 100 மி.லி. (அ) டைமெத்தோயேட் 1000 மி.லி. தெளித்து கட்டுப்படுத்தலாம்.
சுருள் பூச்சிகளுக்கு டைமெத்தோயெட் 1000 மி.லி. (அ) எண்டோசல்பான் 1000 மி.லி. தெளிக்கலாம்.
இலைகளை உண்ணும் பூச்சிகளான புரோடினியா புழு, பச்சைப்புழு, கம்பளிப்புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஸ்பைனாசர்ட் 150 மி.லி. (அ) இன்டாக்ஸா கார்ப் 250 மி.லி. (அ) பெனவலரேட் 500 மி.லி. (அ) எண்டோசல்பான் 1000 மி.லி. தெளித்து கட்டுப்படுத்தலாம்.
பூஞ்சாணக் கொல்லி நோய்களான துருநோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த குளோரோதலோனில் 1000 கிராம் (அ) கார்பெண்டசிம் 500 கிராம் (அ) மான்கோசெப் 1000 கிராம் தெளிக்கலாம்.
கலவன் நீக்குதல்:
இரண்டு அல்லது மூன்று முறை கலவன் பயிர்கலை நீக்க வேண்டும். மெலிந்த, நோய்கள் தாக்கிய, மாறுபட்ட குணாதிசயங்களை கொண்ட மற்றும் வரிசையிலிருந்து தள்ளி முளைத்த செடிகளை அகற்ற வேண்டும்.
வயல் ஆய்வு:
பயிர் பூக்கும் பருவத்திருந்து அறுவடைக்குள் இரண்டு முறை விதைச்சான்று அலுவலரால் வயலாய்வு செய்யப்பட வேண்டும்.
அறுவடை:
நன்கு முற்றிய நிலக்கடலை பயிரை சரியான நேரத்தில் அறுவடை செய்ய வேண்டும். முன்னதாக அறுவடை செய்தாலோ அல்லது கால தாமதமாக அறுவடை செய்தாலோ மகசூல் பாதிக்கப்படுவதோடு விதையின் தரமும் பாதிக்கப்படும்.
இலைகள் மஞ்சள் நிறம் அடைந்த உடன் சில செடிகளை பிடிங்கி அதில் எத்தனை காய்களில் உள் ஓடு கருமை நிறம் அடைந்துள்ளது என்பதை கணக்கிட வேணடும்.
கொத்து ரகங்களாக இருப்பின் 75-80 சதம் காய்கள் உள் ஒடு கருமை நிறம் அடைந்த நிலையும், அடர் கொத்து மற்றும் கொடி ரகங்களாக இருப்பின் 70-75 சதம் காய்கள் உள் ஓடு கருமை நிறம் அடைந்த நிலையும் அறுவடைக்கு உகந்தது.
நிலக்கடலை அறுவடையின் போது செடிகளை பிடிங்கி மண்ணை உதறிவிட்டு காய்கள் மேல்பக்கம் இருக்குமாறு போட வேண்டும்.
அறுவடையின் போது மண்ணில் தங்கும் காய்களை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அவைகளை செடிகளிலிருந்து அறுவடை செய்த விதைகளுடன் கலக்கக்கூடாது.
உலர வைத்தல்:
பிடிங்கிய செடிகளை 2-3 நாள்கள் காய விட்டு காய் பிரிக்கும் இயந்திரங்களின் மூலமாகவோ அல்லது கைகளினாலோ காய்களை பறிக்க வேண்டும். இவற்றிற்கு முறையே 18-20 சதவீதம் ஈரப்பதமும், 15 சதவீதம் ஈரப்பதமும் உள்ள நிலை உகந்தது.
கோடைப் பட்டத்தில் பயிரிடப்படும் விதை, அறுவடைக்கு வரும் தருணத்தில் நிலவும் அதிக வெப்பத்தால் விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கும். எனவே அறுவடையின் போது காய்களில் நேரடியாக வெயில் படுவதை தவிர்க்க வேண்டும். எனவே காய்கள் உள்பக்கம் வருமாறு செடிகளை குவியலாக அடுக்கி வைப்பதன் மூலம் வெயிலின் பாதிப்பை தவிர்க்கலாம்.
காய்களை பிரித்தெடுப்பதற்கு தடிகளினால் அடிப்பதையோ, வேறு பொருள்களின் மீது அடிப்பதோ கூடாது. இதனால காய்களில் காயம்படுவதை தவிர்க்கலாம். பிரித்தெடுக்கப்பட்ட காய்களை 3-4 நாள்கள் நன்கு உலர்த்தி ஈரப்பதம் 9 சதம் வந்தவுடன் சேமிக்க வேண்டும். கோடை பட்டத்தில் பயிரிடப்படும் விதைப்பண்ணை அறுவடையின் போது வெப்பம் அதிகம் இருக்குமாதலால் காய்களை நிழலில் உலர்த்தி முளைப்புத்திறன் பாதிக்கப்படுவதை தவிர்க்கலாம்.
விதை சுத்திகரிப்பு:
விதைகளை சுத்தம் செய்யும் போது காயம்பட்ட, அழுகிய, முளைத்த காய்களை அகற்ற வேண்டும். விதைகளை தரம் பிரிக்கும் போது சரியாக முதிராத பொக்குக்காய்களை அகற்ற வேண்டும். காய்களில் ஒட்டிக் கொண்டுள்ள காம்புகள், இலை, தழை, மண் போன்ற குப்பைகளை முழுவதுமாக நீக்கி நல்ல தரமான விதை காய்களை மட்டுமே சேமிக்க வேண்டும்.
விதை ஆய்வு:
விதைச்சான்று அலுவலர் விதைக்குவியலில் இருந்து மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைப்பார்.
விதை மாதிரிகள் விதை சோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் முடிவுகள் சுமார் 30 நாள்களில் தெரிய வரும்.
மேலும் விவரங்களுக்கு "பேராசிரியர் - தலைவர், எண்ணெய்வித்துத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641003, போன் 0422 -2450812 மற்றும் பேராசிரியர் - தலைவர் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம் - 604 001 என்ற முகவரிகளில் தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என செய்யாறு வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...