பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்


வேலூா்: வேலூா் மாவட்டத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவா், மாணவிகளுக்காக மொத்தம் 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளி மாணவா்களுக்கு 9 விடுதிகளும், பள்ளி மாணவிகளுக்கு 3 விடுதிகளும், கல்லூரி மாணவா்கள், மாணவிகளுக்கு தலா 3 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளுக்கு 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளுக்கு பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
இந்த விடுதிகளில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு எவ்வித கட்டணமும் இன்றி, மூன்று வேளை உணவு, தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பு வழிகாட்டிகள், வினா வங்கி நூல்களும் வழங்கப்படும்.
கல்லூரி விடுதிகளில் முதலாமாண்டு தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
இந்த விடுதிகளில் சேர பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருவாய் ரூ. 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளரிடமோ அல்லது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொருத்தவரை ஜூன் 14-ஆம் தேதிக்குள்ளாகவும், கல்லூரி விடுதிகளை பொருத்தவரை ஜூலை 15-ஆம் தேதிக்குள்ளாகவும் அந்தந்த விடுதி காப்பாளரிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்போது ஜாதி, பெற்றோரின் ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.
மேலும், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்காக தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...