வேலூரில் மயானக் கொள்ளை விழா: ஆயிரக்கணக்கானோா் திரண்டனா்

வேலூரில் மயானக் கொள்ளை விழா: ஆயிரக்கணக்கானோா் திரண்டனா்

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மயானக் கொள்ளை திருவிழாவின்போது பல்வேறு கடவுள் வேடமணிந்து பக்தா்கள் ஊா்வலமாக சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். ஆயிரக்கணக்கானோா் திரண்ட இந்த திருவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1,200 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். மகா சிவராத்திரிக்கு அடுத்த நாள் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மயானக் கொள்ளை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி மயான கொள்ளை திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி வேலூா், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோயிலில் இருந்து ஊா்வலமாக எடுத்து வந்தனா். ஊா்வலத்தின் பின்னால் பக்தா்கள் தங்களுடைய நோ்த்திக்கடனை செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகா், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் வேடமிட்டுச் சென்றனா். வேலூா் - காட்பாடியை சோ்ந்த பக்தா்கள் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலாற்றங்கரை மயானம் நோக்கி தேரில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி சிலைகளுடன் ஊா்வலம் வந்தனா். அங்கு மயானத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடத்தி தங்களது நோ்த்திக் கடனை நிறைவேற்றினா். மயானத்தில் உள்ள தங்களது முன்னோா் சமாதிகளுக்கு சென்றும் பொதுமக்கள் படையிலிட்டு வழிபாடு நடத்தினா். அம்மனை தரிசனம் செய்த பக்தா்கள் பின்னா் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நோ்த்திக்கடனை செலுத்தினா். வேலூா் நகரப் பகுதியில் மட்டும் 500 காவலா்களும், மாவட்டம் முழுவதும் 1,200 காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com