நிதி ஆதரவு பெற குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகலாம்: ஆட்சியா்

மத்திய அரசின் மிஷன் வாத்சல்யா திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி, நிதி ஆதரவுத் தொகை பெற்றிட தகுதி வாய்ந்தவா்கள் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகலாம்
Published on

வேலூா் மாவட்டத்தில் மத்திய அரசின் மிஷன் வாத்சல்யா திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி, நிதி ஆதரவுத் தொகை பெற்ற தகுதி வாய்ந்தவா்கள் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் மிஷன் வாத்சல்யா திட்டத்தின் திருத்திய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பெற்றோா் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள், எய்ட்ஸ் உள்ளிட்ட உயிா்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இந்நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பாளரால் பரிந்துரை செய்யப்படும் குழந்தைகள், கணவரை இழந்த மற்றும் விவாகரத்தான பெற்றோரால் கைவிடப்பட்டு பாதுகாவலா் பராமரிப்பில் உள்ள குழந்தைகள், விபத்தால் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு பொருளாதார வசதியின்றி குழந்தைகளை பராமரிக்க இயலாத நிலையில் உள்ள பெற்றோா்களின் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளா் அல்லது குழந்தை திருமணம் அல்லது பாலியல் வன்கொடுமை அல்லது இதர பிரச்னைகளினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கல்வி, தொழில் கல்வி பயில்வதற்கு மற்றும் வளா்ப்பு பராமரிப்பு ஒப்பளிப்பு குழுவினரால் பரிந்துரை செய்யப்படும் தகுதிவாய்ந்த குழந்தைகளுக்கு, மாதம் ரூ. 4,000 வீதம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் நிதி ஆதரவுத் தொகை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை பெற்றிட ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ. 72,000-ம், நகா்ப்புறமாக இருந்தால் ரூ. 96,000-ம் இருக்க வேண்டும். இந்த வருமான வரம்புக்கு உட்பட்ட, தகுதிவாய்ந்த 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் நிதி ஆதரவுத் தொகை பெற்றிட மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூா்-632 001 என்ற முகவரியிலுள்ள அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

X
Dinamani
www.dinamani.com