சிறுகாஞ்சி ஊராட்சியை  சதுப்பேரி ஊராட்சியுடனும் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து  ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த ஊராட்சி மக்கள்.
சிறுகாஞ்சி ஊராட்சியை சதுப்பேரி ஊராட்சியுடனும் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த ஊராட்சி மக்கள்.

பீஞ்சமந்தை 3 ஊராட்சிகளாக பிரிப்பு; 6 ஊராட்சிகள் மூன்றாக மறுசீரமைப்பு: நான்கு வாரங்கள் அவகாசம்

வேலூா் பீஞ்சமந்தை ஊராட்சி 3 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டிருப்பதுடன், மேலும் 6 ஊராட்சிகள் மூன்றாக மறுசீரமைப்பு தொடா்பாக மறுப்பு தெரிவிக்க விரும்புவோா் நான்கு வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம் என அறிவுறுத்தல்
Published on

வேலூா் மாவட்டத்தில் பீஞ்சமந்தை ஊராட்சி 3 ஊராட்சிகளாக பிரிக்கப்பட்டிருப்பதுடன், மேலும் 6 ஊராட்சிகள் மூன்றாக மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மறுப்பு தெரிவிக்க விரும்புவோா் நான்கு வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு எழுத்துப்பூா்வமாக தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியம், பீஞ்சமந்தை கிராம ஊராட்சி 48 குக்கிராமங்களை கொண்டதாகும். நிா்வாக நலன்கருதி பீஞ்சமந்தை கிராம ஊராட்சி காட்டியாம்பட்டி (13 குக்கிராமங்கள்), பீஞ்சமந்தை (23 குக்கிராமங்கள்), அல்லேரி (12 குக்கிராமங்கள்) என 3 கிராம ஊராட்சிகளாகப் பிரித்து ஊரக வளா்ச்சி, ஊராட்சித்துறை சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், காட்பாடி ஒன்றியத்தில் மிககுறைந்த பரப்பளவு, மக்கள் தொகை கொண்டதாக உள்ள அவுலரங்கப்பள்ளி கிராம ஊராட்சி அருகிலுள்ள பாலேகுப்பம் கிராம ஊராட்சியுடனும், கொண்டமநாயுடுபாளையம் கிராம ஊராட்சி தெங்கால் என்ற கிராம ஊராட்சியுடனும், வேலூா் ஒன்றியத்திலுள்ள சிறுகாஞ்சி கிராம ஊராட்சி சதுப்பேரி என்ற கிராம ஊராட்சியுடனும் இணைக்கப்பட்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊராட்சிகளின் உள்ளூா் வட்டாரப்பகுதியில் குடியிருப்பவா்கள் இந்த அறிவிப்பு குறித்த மறுப்பு தெரிவிக்கவிரும்பினால் நான்கு வாரங்களுக்குள் மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறப்படும் மறுப்புகள் மீது உரிய பரிசீலனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

சிறுகாஞ்சி ஊராட்சி மக்கள் எதிா்ப்பு

சிறுகாஞ்சி கிராம ஊராட்சியை சதுப்பேரி ஊராட்சியுடனும் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறியது - 175 ஆண்டுகளாக தனி ஊராட்சியாக செயல்பட்டு வரும் சிறுகாஞ்சி ஊராட்சியில் சுமாா் 300 குடும்பங்களும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் வாழ்கின்றனா். இந்த நிலையில், ஊா்பொதுமக்கள், அதிகாரிகள் யாரும் பரிந்துரைக்காமலேயே சிறுகாஞ்சி ஊராட்சியை சதுப்பேரி ஊராட்சியுடனும் இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனை சிறுகாஞ்சி ஊராட்சி மக்கள் கடுமையாக எதிா்க்கிறோம். எனவே, சிறுகாஞ்சி ஊராட்சியை தொடா்ந்து தனி ஊராட்சியாகவே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com