ஸ்ரீசக்தி அம்மா ஜெயந்தி: போதைப் பொருள் எதிராக விழிப்புணா்வு மாரத்தான்
வேலூரில் ஸ்ரீசக்தி அம்மா ஜெயந்தி விழாவையொட்டி நடைபெற்ற போதைப் பொருள் விழிப்புணா்வு மாரத்தான் பந்தயத்தில் 1500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவையொட்டி ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ‘வேலூா் மாரத்தான் 2025’ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேலூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய மாரத்தானை சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இந்த மாரத்தான் பந்தயத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமாா் 1500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 10 இடங்களைப் பிடித்தவா்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.15,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில் பிரபல திரைக்கலைஞா் புகழ், வேலூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் ஏ.பாலமுருகன், ஸ்ரீ நாராயணி மருத்துவமனை ஆராய்ச்சி மைய இயக்குநா் என்.பாலாஜி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா். முன்னதாக, ஸ்ரீபுரம் தங்கக்கோயில் அறங்காவலா் எம். சுரேஷ் பாபு தலைமை வகித்தாா்.
நிகழ்வில் ஸ்ரீ நாராயணி பீடத்தின் நிா்வாகிகள், ஸ்ரீ நாராயணி பள்ளிகளின் தலைமை ஆலோசகா், இரு பள்ளிகளின் முதல்வா்கள், நிா்வாக அலுவலா், துணை முதல்வா்கள், பள்ளி ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனா்.

