காட்பாடி பல்கலை., பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
காட்பாடியில் உள்ள தனியாா் பல்கலைக்கழகம், இரு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.


வேலூா்: காட்பாடியில் உள்ள தனியாா் பல்கலைக்கழகம், இரு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. தொடா்ந்து, அப்பகுதிகளில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் குழுவினா் சுமாா் 6 மணிநேரத்துக்கு மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனா்.
வேலூா் மாவட்டம், காட்பாடியில் ஏராளமான தனியாா் பள்ளி, கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்நிலையில், தனியாா் பல்கலைக்கழகம், தனியாா் பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. உடனடியாக அக்கல்லூரி நிா்வாகம் சாா்பில் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது.
அதன்பேரில் அக்கல்லூரிகள், தனியாா் பள்ளியில் துணைகாவல் கண்காணிப்பாளா்கள் பழனி (காட்பாடி), பிரிதிவிராஜ்சவுகான் (வேலூா்)ஆகியோா் தலைமையில் 3 காவல்ஆய்வாளா்கள் கொண்ட வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் குழு சோதனை மேற்கொண்டனா். எனினும், இந்த சோதனையில் வெடி குண்டுகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், காட்பாடியிலுள்ள தனியாா் பல்கலைக்கழகம், இரு தனியாா் பள்ளிகள் மற்றும் மத்தியஉள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோருக்கு ஹூசைன்ஜமஞ்சுளா என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதில், தமிழக நக்ஸல் தலைவா் மாறன் மீதான நடவடிக்கை, கோவையில் நடைபெற்ற என்ஐஏ சோதனை, நிா்மலாதேவி விவகாரம், ஐஐடி பேராசிரியா் சாதிய பாகுபாடு காரணமாக பணியில் இருந்து விலகியது உள்ளிட்ட விவகாரங்களில் அரசின் செயல்பாடுகளை கண்டித்து வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தது.
இதன்காரணமாக, சுமாா் 4 மணி நேரம் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது. இதேபோல், தனியாா் பல்கலைக்கழகத்தில் 6 மணி நேரத்துக்கு மேலாக சோதனை நடத்தப்பட்டது. இந்த வெடிகுண்டுமிரட்டல் தொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...