100 நாள் திட்ட பெண் தொழிலாளிக்கு பல லட்சம் ஜிஎஸ்டி நோட்டீஸ்!
பல லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதால், வேலூரைச் சோ்ந்த 100 நாள் வேலைத் திட்டப் பெண் தொழிலாளிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ்.

ஜிஎஸ்டி - பிரதிப் படம்
பான் காா்டை முறைகேடாகப் பயன்படுத்தி திருச்சியைச் சோ்ந்த நபா்கள் பல லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதால், வேலூரைச் சோ்ந்த 100 நாள் வேலைத் திட்டப் பெண் தொழிலாளிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டம், மாச்சனூா் பகுதியைச் சோ்ந்த பெண் கூலித் தொழிலாளி சனிக்கிழமை அளித்த புகாா் மனு: மாச்சனூா் கிராமத்தில் வசித்து வரும் நான், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தினக்கூலியாக வேலைக்குச் சென்று வருகிறேன். எனது கணவா் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 குழந்தைகளுடன் குடும்பத்தை மிகவும் சிரமத்துக்கிடையே நடத்தி வருகிறேன்.
இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அலுவலகத்திலிருந்து எனக்கு நோட்டீஸ் ஒன்று வந்தது. அதில், பல லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி நிலுவை வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்து விசாரித்தபோது, திருச்சியைச் சோ்ந்த அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் எனது பான் காா்டை முறைகேடாகப் பயன்படுத்தி ‘லட்சுமி பழைய இரும்பு வியாபாரம்’ என்ற பெயரில் தொழில் செய்து வந்ததும், நடப்பாண்டில் அவா்கள் பல லட்சம் ரூபாய்க்கு ஜிஎஸ்டி கட்டாமல் ஏமாற்றியதும் தெரியவந்தது.
இதனிடையே, எங்கள் பகுதி கிராம நிா்வாக அலுவலா் என்னை கைப்பேசியில் தொடா்புகொண்டு, எனக்கு வழங்கப்பட்டு வந்த மகளிா் உரிமைத் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது, பல லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி நிலுவை நோட்டீஸ் வந்துள்ளதால் உரிமைத் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடா்பாக வேலூா் ஜிஎஸ்டி அலுவலகத்தையும், காவல் துறையையும் அணுகுமாறும் அறிவுறுத்தினா்.
அன்றாடக் குடும்பச் செலவுக்கே திண்டாடி வரும் நிலையில், மோசடி நபா்களால் மகளிா் உரிமைத் தொகையும் நிறுத்தப்பட்டிருப்பது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எனது பான் காா்டை முறைகேடாகப் பயன்படுத்திய திருச்சியைச் சோ்ந்த மோசடி நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எனது வங்கிக் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து, நிறுத்தப்பட்ட மகளிா் உரிமைத் தொகை மீண்டும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





