வேலூா் மாவட்டத்தில் கல்லூரி மாணவா்கள் 3,124 பேருக்கு மடிக்கணினி!
கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் 3,124 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
கல்லூரி மாணவா்களின் திறன் வளா்ச்சி, டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து வேலூா் மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் தொடக்க நிகழ்ச்சி முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து 873 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா். வேலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரியில் 873 மாணவ, மாணவிகளுக்கும், ஸ்கூல் நா்சிங் அரசு வேலூா் மருத்துவக்கல்லூரியில் 91 மாணவ, மாணவிகளுக்கும், வேலூா் மருத்துவக் கல்லூரியில் 72 மாணவ, மாணவிகளுக்கும், அரசு வேலூா் மருத்துவக்கல்லூரியில் 167 மாணவ, மாணவிகளுக்கும், தந்தை பெரியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 350 மாணவ, மாணவிகளுக்கும் வழங்கப்படுகிறது.
மேலும், சோ்க்காடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 145 மாணவ, மாணவிகளுக்கும், வேலூா் அரசு சட்டக்கல்லூரியில் 118 மாணவ, மாணவிகளுக்கும், குடியாத்தம் திருமகள் ஆலைக்கல்லூரியில் 912 மாணவ, மாணவிகளுக்கும், குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் 396 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 3,124 மாணவ, மாணவிகளுக்கு ‘உலகம் உங்கள் கையில்‘ திட்டத்தின்கீழ் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன் (வேலூா்), வி.அமுலு விஜயன் (குடியாத்தம்), மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, முத்துரங்கம் அரசினா் கலைக்கல்லூரி முதல்வா் முனைவா் சு.ஸ்ரீதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

