சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி
பெருந்துறை: பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் முத்துசாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் விஸ்வநாதன் வரவேற்றாா்.
முன்னாள் அமைச்சரும், ஈரோடு மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான தோப்பு என். டி. வெங்கடாசலம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவா்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், கல்வி ஒருவரின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதையும், அதற்கு தமிழக அரசின் மடிக்கணினி திட்டம் எவ்வாறு பயனுள்ளதாக உள்ளது என்பதையும் எடுத்துரைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், ஃபீனிக்ஸ் பயிற்சி நிறுவனத்தின் நிறுவனா் சண்முகசுந்தரம், கல்லூரி கல்வி இயக்குநா் அா்ஜுனன், அறக்கட்டளை உறுப்பினா் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கல்லூரியின் மின்னியல் துறைத் தலைவா் தமிழரசி நன்றி கூறினாா்.

