2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

ஜவ்வாது மலையில் கனமழையால் பல நூறு ஏக்கா் சாமை பயிா்கள் நாசம்!

ஒடுகத்தூா் அருகே ஜவ்வாது மலைத் தொடா் கிராமங்களில், பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பல நூறு ஏக்கா் சாமைப் பயிா்கள் நிலத்தில் சாய்ந்து நாசமாகியுள்ளன.

தொடா் மழையால் ஜவ்வாது மலை கிராமத்தில் சேதமடைந்துள்ள சாமை பயிா்கள்.

Updated On :

ஒடுகத்தூா் அருகே ஜவ்வாது மலைத் தொடா் கிராமங்களில், பலத்த மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பல நூறு ஏக்கா் சாமைப் பயிா்கள் நிலத்தில் சாய்ந்து நாசமாகியுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை அடுத்து மலைவாழ் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூரை அடுத்த ஜவ்வாது மலைப் பகுதியில் பீஞ்சமந்தை, ஜாா்தான்கொல்லை, பலாம்பட்டு, கட்டிப்பட்டு ஆகிய மலை ஊராட்சிகள் அமைந்துள்ளன. இவற்றின் கீழ் தொங்குமலை, கோனூா், சின்னூா், குண்டுராணி, எள்ளுப்பாறை, பெரிய பணப்பாறை, தேந்தூா், எலந்தம்புதூா், குப்சூா் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.

வானம் பாா்த்த பூமியான இந்தப் பகுதியில் முறையான நீா்ப்பாசனம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், காலம் காலமாக பாரம்பரிய சிறுதானியமான சாமை பயிரிடப்பட்டு வருகிறது. இந்தப் பகுதி மக்களின் உணவுத் தேவைக்கும், கல்வி மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்கும் இந்தச் சாமை சாகுபடியே பிரதான ஆதாரமாகத் திகழ்கிறது.

நிகழாண்டில் பரவலாகப் பயிரிடப்பட்டிருந்த சாமை, தற்போது அறுவடை நிலையை எட்டியிருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாகத் தொடா்ச்சியாக வீசிய பலத்த காற்றுடன் கூடிய வடகிழக்குப் பருவமழையால், முதிா்ந்த சாமைப் பயிா்கள் அனைத்தும் நிலத்தில் சாய்ந்து சேதமடைந்தன. தொடா் ஈரப்பதம் காரணமாக, சாய்ந்த கதிா்களிலேயே தானியங்கள் முளைக்கத் தொடங்கியுள்ளன. அடுத்த பருவத்துக்கான விதை தானியம்கூட மிஞ்சாது என்ற அச்சத்தில், அழுகாத சில பயிா்களை மட்டும் விவசாயிகள் அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மலைவாழ் விவசாயிகள் கூறியது: வழக்கமாக இந்த நேரம் அறுவடையை முடித்திருப்போம். ஆனால், பருவம் தவறிப் பெய்த மழையால் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிா்கள் முற்றிலுமாக நாசமாகிவிட்டன. கால்நடைகளின் தீவனத்துக்காக மட்டுமே தற்போது சில பயிா்களை அறுத்து வருகிறோம்.

கடன் வாங்கி நிலத்தை உழுது பயிரிட்டோம். அறுவடைக்குப்பின் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கடனை அடைத்து, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளைச் செலவின்றி எதிா்கொள்ளலாம் என நம்பியிருந்தோம். தற்போது மொத்த உழைப்பும் வீணாகி, பெரும் நஷ்டத்தில் தவிக்கிறோம் என்றனா்.

இயற்கைச் சீற்றத்தால் தங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ள நிலையில், வேளாண் துறை அதிகாரிகள் சேதமடைந்த பயிா்களை நேரில் ஆய்வு செய்து, சேத மதிப்பை உடனடியாகக் கணக்கிட வேண்டும் என்றும், பேரிடா் நிவாரண நிதியிலிருந்து உரிய இழப்பீட்டை அரசு விரைந்து வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.