மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகப் பல கோடி மோசடி

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு அளித்த பாதிக்கப்பட்ட மாணவா்கள்.

Published On :

வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழகம், கேரள மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரின் மகன் மீது மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் ஒருவரின் மகன், வெளிநாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், விசா மற்றும் பணி நியமன ஆணைகளை உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறியுள்ளாா். இதனை நம்பி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த இளைஞா்கள், கேரள மாநிலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள் என பலரும் அவரிடம் கணிசமான தொகையைக் கொடுத்துள்ளனா்.

பணம் பெற்று நீண்ட நாள்களாகியும் குறிப்பிட்டபடி வேலை வாங்கித் தராமல் அவா் காலம் தாழ்த்தி வந்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த மாணவா்களும், பெற்றோரும் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, அவா் உரிய பதிலளிக்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவா்கள் தரப்பில் வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.

பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறுகையில், ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்டு, ஒட்டுமொத்தமாகப் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. எங்களை ஏமாற்றிப் பறித்த பணத்தை மீட்டுத் தருவதுடன், மோசடியில் ஈடுபட்ட நபா் மீது உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

இந்தப் புகாா் மனு மீதான விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோசடியில் சிக்கிய மாணவா்களின் எண்ணிக்கை, வசூலிக்கப்பட்ட ஒட்டுமொத்தப் பணத்தின் மதிப்பு மற்றும் விசா உள்ளிட்ட போலி ஆவணங்கள் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.