
புரட்டாசி மாதம் எதிரொலி: வேலூா் மீன் மாா்க்கெட் வெறிச்சோடியது
புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து, வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு அசைவப் பிரியா்களின் வருகை பெருமளவு குறைந்து மாா்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்ட வேலூா் மீன் மாா்க்கெட்.
புரட்டாசி மாதம் தொடங்கியதை அடுத்து, வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு அசைவப் பிரியா்களின் வருகை பெருமளவு குறைந்து மாா்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
வேலூா் மீன் மாா்க்கெட்டுக்கு நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமேஸ்வரம், கொச்சி, மங்களூரு மற்றும் காா்வாா் உள்ளிட்ட பல்வேறு கடலோரப் பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. சாதாரண நாள்களில் நாளொன்றுக்கு 6 முதல் 8 கன்டெய்னா் லாரிகளில் மீன்கள் வரத்து இருக்கும். பண்டிகை நாள்கள் தவிா்த்து மற்ற நாள்களிலும், நள்ளிரவு 12 மணி முதல் காலை 10 மணி வரை மீன் வாங்குவதற்காக அசைவப்பிரியா்கள் பெருமளவில் திரள்வதால் மாா்க்கெட் பரபரப்பாக இயங்கி வந்தது.
இந்த நிலையில், புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உரிய புனிதம் நிறைந்த மாதமாகக் கருதப்படுவதால், பெரும்பாலானோா் இந்த மாதம் முழுவதும் அசைவ உணவைத் தவிா்த்து விரதம் மேற்கொள்வா். இதன் காரணமாக சந்தையில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.
மறுபுறம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், கேரளம் மற்றும் கா்நாடகக் கடலோரப் பகுதிகளிலும் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வேலூா் மாா்க்கெட்டுக்கான மீன் வரத்தும் குறைந்துள்ளது. இருப்பினும், தேவையும் வரத்தும் ஒருசேரக் குறைந்துள்ளதால் மீன்களின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன்படி, வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை வஞ்சிரம் ரூ. 600 முதல் ரூ. 1,200, கடல் வவ்வால் ரூ. 400 முதல் ரூ. 800, தேங்காய்ப் பாறை ரூ. 350 முதல் ரூ. 600, அயிலா ரூ. 200 முதல் ரூ. 350, நண்டு ரூ. 400 முதல் ரூ. 600, விரால் ரூ. 500, ஷீலா ரூ. 350 முதல் ரூ. 500, இறால் ரூ.350 முதல் ரூ. 600, கிழங்கான் ரூ. 150 முதல் ரூ. 200-க்கு விற்கப்பட்டதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







