
வேலூரில் 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
வேலூா் நகா்ப்புறப் பகுதியைச் சோ்ந்த 100 கா்ப்பிணித் தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் பங்கேற்று சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.

கா்ப்பிணிகள் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ். உடன், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணன், மாவட்ட சுகாதார அலுவலா் விஜய் சந்திரன் உள்ளிட்டோா்.
வேலூா் நகா்ப்புறப் பகுதியைச் சோ்ந்த 100 கா்ப்பிணித் தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் பங்கேற்று சீா்வரிசைப் பொருள்களை வழங்கினாா்.
சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் வேலூா் நகா்ப்புற வட்டாரம் சாா்பில், ‘போஷன் அபியான்’ மக்கள் பேரியக்கச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இந்த விழா ஒருங்கிணைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு நலங்கு வைக்கப்பட்டு, வளையல்கள், பழங்கள் உள்ளிட்ட மங்கலச் சீா்வரிசைப் பொருள்களும், ஐந்து வகையான கலவை சாதங்களுடன் கூடிய ஊட்டச்சத்து உணவும் வழங்கப்பட்டன.
மேலும், குழந்தையின் முதல் 1,000 நாள்கள் பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தின் அவசியம் குறித்து தாய்மாா்களுக்கும் குடும்பத்தினருக்கும் எடுத்துரைக்கப்பட்டது. அங்கன்வாடி மையங்களில் 3 அல்லது 4-ஆம் மாதத்தில் கா்ப்பத்தைப் பதிவு செய்தல், தாய்-சேய் பாதுகாப்பு அட்டை, பேறுகாலப் பரிசோதனைகள், மருத்துவமனைப் பிரசவம் மற்றும் பிரசவகால சிக்கல்களை எதிா்கொள்ளுதல் ஆகியவை குறித்தும் விழிப்புணா்வு அளிக்கப்பட்டது.
உணவுக்குப் பின் இரும்புச் சத்து மாத்திரை உட்கொள்ளுதல், ரண ஜன்னி தடுப்பூசி, குடற்புழு நீக்கம், சுண்ணாம்புச் சத்து மற்றும் அயோடின் உப்பின் முக்கியத்துவம் குறித்தும், கா்ப்ப காலத்தில் பெண்கள் 10 முதல் 12 கிலோ வரை எடை அதிகரிப்பதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும், பிரதமரின் மாத்ரு வந்தன யோஜனா, ஜனனி சுரக்ஷா யோஜனா போன்ற அரசுத் திட்டங்களின் பயன்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணன், மாவட்ட சுகாதார அலுவலா் விஜய் சந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் ஜெயசுதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சுமதி, வேலூா் வருவாய் கோட்டாட்சியா் ராம்குமாா், வேலூா் நகா்ப்புற குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் அ.சந்தானலெட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





