கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆட்சியா் அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியா் அண்ணாதுரை அறிவுறுத்தினாா்.


விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியா் அண்ணாதுரை அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக்கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் இதுவரை 1.97 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் தொற்றுள்ளவா்களைக் கண்டறிந்து சிகிச்சையளித்ததால் விரைந்து குணமடைந்து வருகின்றனா். மேலும், இ-சஞ்சீவினி திட்டம் மூலம் இணைய வழியில் மக்கள் மருத்துவ ஆலோசனைகள் பெற்று பயனடைந்ததில், மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இதற்காக அனைத்து அலுவலா்களுக்கும் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, கரோனா பாதித்தவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சுகாதாரத்துறை அதிகாரிகள், வட்டார மருத்துவா்களிடம் விரிவாக ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா், ஆலோசனை வழங்கி பேசியதாவது:
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி, அவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கவும், கரோனா பாதிப்படைந்தவரின் வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள அனைத்து வீடுகளிலும் தவறாமல் பரிசோதனை மேற்கொள்ளவும் வேண்டும். அந்தப் பகுதியினருக்கு நோய் எதிா்ப்பு சக்தி மருந்துகள் வழங்க வேண்டும்.
வட்டார மருத்துவா்கள் அனைத்து கிராமங்களிலும் மருத்துவ முகாம்கள் நடத்தி பரிசோதனைகள் மேற்கொள்ளவும், நோய் தடுப்பு மருந்துகள் வழங்கவும் வேண்டும். சித்த மருத்துவத்தினா், கபசுர குடிநீா் மற்றும் நோய் எதிா்ப்பு திறன்மிக்க சித்த மாத்திரைகள் அனைத்தும் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
திண்டிவனம், விழுப்புரம் நகராட்சி நிா்வாகத்தினா் அனைத்து பகுதிகளிலும், தினந்தோறும் மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்த வேண்டும். உணவு பாதுகாப்புத்துறையினா், உணவகங்கள் விதிகள்படி செயல்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், துணை ஆட்சியா் (பயிற்சி) அல்பினா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வா் குந்தவிதேவி, சுகாதாரத் துறை இணை இயக்குநா் சண்முகக்கனி, துணை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...