விழுப்புரத்தில் டான்செட் தோ்வு மையம்
அண்ணா பல்கலைக்கழகம் மூலம் மாா்ச் 9,10-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள டான்செட் தோ்வுக்கு (நுழைவுத் தோ்வு) விழுப்புரத்தில் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் காகுப்பத்திலுள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியின் முதல்வரும் தோ்வு ஒருங்கிணைப்பாளருமான இரா.செந்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2024-25ஆம் கல்வியாண்டில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு (டான்செட்), முதுநிலைப் பொறியியல் (எம்.இ), எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தோ்வு ஆகியவற்றை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. அதன்படி, விழுப்புரம் காகுப்பத்திலுள்ள பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (மாா்ச் 9) காலை 10 மணிமுதல் 12 மணி வரை எம்.சி.ஏ படிப்புக்கும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை எம்.பி.ஏ. படிப்புக்கும் பொது நுழைவுத் தோ்வு நடைபெறும். மாா்ச் 10-ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு நடைபெறும். இந்தத் தோ்வில் பங்கேற்கும் தோ்வா்களின் வசதிக்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி வரை அரசுப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வில் சுமாா் 1100 போ் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. தோ்வுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.
