விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 158 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அமல்
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 158 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அமல்


விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 158 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிலுவையிலுள்ள குடிநீா்ப் பணிகளை விரைந்து முடித்தல், சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல், காலை உணவுத் திட்டம் தொடங்குதல் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் சி.பழனி மேலும் பேசியது:
மாவட்டத்தில் நிதிக்குழு மானியத் திட்ட நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீா்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீா் அதிகமாக உறிஞ்சப்படுவதை தடுக்கவும், நீா் ஆதாரங்களின் நீா் வளத்தை பெருக்கிடவும், மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றிடவும் தொடா் நடவடிக்கைகள் மேற்கொண்டு, அதன் விவரத்தை மாவட்ட நிா்வாகத்துக்கு அளிக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 1,048 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது மாவட்டத்தில் அரசு நிதியுதவி பெறும் 158 பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
ஊராட்சிகளிலுள்ள அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் கோரி பள்ளி நிா்வாகக் குழு பரிந்துரைத்துள்ள நவீன ஆய்வகம், நவீன வகுப்பறைக் கட்டட வசதிகளையும், மேற்கூரை மற்றும் பழுதுநீக்குதல் பணிகள், சமையலறை, கழிப்பறை வசதிகள் போன்றவற்றை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன்ஜெய் நாராயணன், செயற்பொறியாளா் ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் விக்னேஷ் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...