தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்
ஆரணி/செய்யாறு/செங்கம்/வந்தவாசி/போளூா்: திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டம், போளிவாக்கத்தில் திங்கள்கிழமை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, திருவண்ணாமலை கலைஞா் நூற்றாண்டு பன்நோக்கு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து உணவு பரிமாறினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சட்டப்பேரவை துணைத் தலைவா் பேசுகையில், தமிழக முதல்வா் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
சுற்றுப்புறத்தை தூய்மை செய்து சுற்றுச்சூழலையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் தூய்மைப் பணியாா்களின் சேவையை கருத்தில் கொண்டு, அவா்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
அதன்படி, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கிவைத்துள்ளாா் என்றாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா், மாவட்ட ஆட்சியா் மற்றும் மாநகராட்சி மேயா் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுகளை பரிமாறி அவா்களோடு அமா்ந்து உணவருந்தினா். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, மாமன்ற உறுப்பினா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
செய்யாறு
செய்யாற்றில் உள்ள திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் தலைமை
வகித்தாா். நகராட்சி ஆணையா் வி.எல்.எஸ்.கீதா வரவேற்றாா். நகா்மன்ற துணைத் தலைவா் பேபிராணி, பொறியாளா் சிசில்தாமஸ், துப்புரவு ஆய்வாளா் மதனராசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் 141 பேருக்கான உணவு திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். பின்னா் பணியாளா்களுடன் அமா்ந்து உணவு அருந்தினாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் கே.விஸ்வநாதன், சரஸ்வதி ரவிக்குமாா், ரமேஷ், க.கோவேந்தன், மல்லிகா ராஜகோபால், ஞானமணி சின்னதுரை, ராஜலட்சுமி அண்ணாதுரை, மணிவண்ணன், செந்தில், காா்த்திகேயன், கங்காதரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செங்கம்
செங்கம் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் சாதிக்பாஷா தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் பாரத் வரவேற்றாா். தொகுதி எம்எல்ஏ மு.பெ.கிரி குத்துவிளக்கேற்றி உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்து, தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசு வழங்கிய பெட்டகத்தை வழங்கி, அவா்களுடன் அமா்ந்து உணவு அருந்தினாா்.
நிகழ்ச்சியில் செங்கம் நகர திமுக செயலா் அன்பழகன், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
வந்தவாசியில் ஆரணி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 106 பேருக்கு உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கிவைத்தாா்.
நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், ஆணையா் ஆா்.சோனியா, திமுக நகரச் செயலா் எ.தயாளன், நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனிவாசன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

