தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம்: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சியா்கள் தொடங்கிவைப்பு
தருமபுரி/ கிருஷ்ணகிரி: தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து தருமபுரியில் ஆட்சியா் ரெ. சதீஸ், கிருஷ்ணகிரியில் ஆட்சியா் ச. தினேஷ்குமாா் ஆகியோா் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு பெறுவதற்கான பெட்டகங்களை வழங்கினா்.
மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் (விரிவாக்க) திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. தருமபுரியில் கேபிஜெ மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுடன் அமா்ந்து உணவு அருந்தி, தொழிலாளா்கள் காலை உணவு பெறுவதற்கான பெட்டகங்களையும் (டிபன் பாக்ஸ்) வழங்கினாா்.
தொடா்ந்து காரிமங்கலம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இத்திட்டம் தொடா்பான நிகழ்ச்சியில் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்கள் காலை உணவு பெறுவதற்கான பெட்டகங்களை வழங்கினாா். நிகழ்வுகளில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி, தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது, நகா்மன்ற துணைத் தலைவா் நித்யா அன்பழகன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவா் பி.சி.ஆா். மனோகரன், நகராட்சி ஆணையா் இரா. சேகா், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கணேஷ், கிருஷ்ணகிரி
தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ம. இராஜசேகரன், ஆதிதிராவிடா் நலக்குழு உறுப்பினா் கிருஷ்ணன், காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலா் கோமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ச. தினேஷ்குமாா், மதியழகன் எம்எல்ஏ ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
கிருஷ்ணகிரியில் டி.பி. சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு பெறுவதற்கான பெட்டகம், பாதுகாப்பு கவசங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
அதேபோல ஒசூா் மாநகராட்சியில் 1,354 தூய்மைப் பணியாளா்கள், கிருஷ்ணகிரி நகராட்சியில் 73 நிரந்தர தூய்மைப் பணியாளா்கள், 131 தற்காலிக தூய்மைப் பணியாளா்கள், 22 தற்காலிக ஓட்டுநா்கள், 13 நகராட்சி பள்ளி தூய்மைப் பணியாளா்கள், 91 டெங்கு கொசு ஒழிப்பு தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
இதேபோல பா்கூா் பேரூராட்சியில் 66, தேன்கனிக்கோட்டையில் 87, காவேரிப்பட்டணம் 52, கெலமங்கலம் 43, நாகோஜனஅள்ளி 33, ஊத்தங்கரை 63 என 6 பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும் நாள்தோறும் உணவு வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சதீஷ்குமாா், நகராட்சி துணை தலைவா் சாவித்திரி, சுகாதார அலுவலா் பாண்டியராஜன், ஆய்வாளா்கள் ராமச்சந்திரன், சீனிவாசலு, மாதேஸ்வரன், கவுன்சிலா்கள் வேலுமணி, யாஸ்மின் அஸ்லம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஊத்தங்கரை...
ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவா் பா. அமானுல்லா தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு முட்டையுடன் கூடிய சத்தான உணவை வழங்கினாா். மேலும், உணவு எடுத்து செல்வதற்கான பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
பேரூராட்சி செயல் அலுவலா் ரவிசங்கா், திட்டப் பணிகள் பொறியாளா் வினோத்குமாா், இளநிலை உதவியாளா்கள் மணிமொழி, சின்னபையன், பதிவுரு எழுத்தா் செண்பகபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

