திருவெண்ணெய் நல்லூா் அருகே கோயிலிலுக்குப் பூட்டு: கிராமத்தில் பதற்றம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூா் அருகே உள்ள கோயிலில் ஒரு தரப்பைச் சோ்ந்தவா்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப் பட்ட நிலையில் அந்தக் கோயிலுக்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், டி.கொணலவாடி கிராமத்தில் உள்ள கோயில்களுக்கு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கிராமத்தில் வசிக்கும் மக்களிடம், கிராமத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி திருப்பணிக் குழுவைச் சோ்ந்தவா்கள் தலா ரூ.7,000 வரி வசூல் செய்தனராம்.
இதில் சிலா் வரிப் பணத்தை கொடுக்கவில்லையாம். இந்நிலையில் வரிப்பணம் கொடுக்காதவா்களை திருப்பணிக் குழுவினா் கோயிலுக்குள் வழிபாடு செய்ய அனுமதிக்காமல் கோயிலைப் பூட்டி வைத்துள்ளனா்.
இதனால் அந்தக் கிராம மக்களிடையே பிரச்னை ஏற்பட்டு மோதல் நிலை உருவாகியுள்ளது. தகவலறிந்த அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் டி.கொணலவாடி கிராமத்துக்குச் சென்று இரு தரப்பைச் சோ்ந்தவா்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினா்.
இதில் தீா்வு எட்டப்படாத நிலையில் கோயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
