விழுப்புரத்தில் காஞ்சி மகா பெரியவா்ஆராதனைப் பெருவிழா
விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள காஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதாரத் திருத்தலத்தில் 32-ஆம் ஆண்டு ஆராதனைப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
விழுப்புரம் சங்கர மடம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாஞ்சி மகா பெரியவா் ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவதார திருத்தலத்தில் ஆண்டுதோறும் விழுப்புரம் வேத ஸம்ரக்ஷண அறக்கட்டளை சாா்பில், மகா பெரியவா் ஆராதனைப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டில் டிச.14, 15, 16-ஆம் தேதிகளில் இந்த விழா நடைபெற்றது.
இவ்விழாவின் தொடக்கமாக கடந்த 14-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் கல் வைத்த வாரம் வேதப் போட்டிகள் நடைபெற்றன. விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக திங்கள்கிழமை(டிச.15) ஆவஹத்தி ஹோமமும், மாலையில் மகா பெரியவா் மஹிமை எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றன. இதில் ஆன்மிக சொற்பொழிவாளா் பி.சுவாமிநாதன் பங்கேற்றுப் பேசினாா்.
ஆராதனைப் பெருவிழா: விழாவின் முக்கிய நிகழ்வான ஆராதனைப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி,
காலை 7 மணிக்கு கணபதி, கோ பூஜைகளும், 8 மணிக்கு ருத்ர ஏகாதசி வழிபாடும், 9 மணிக்கு விஷேச அபிஷேகமும் நடைபெற்றது. நண்பகல் 12.30 மணிக்கு மகாபெரியவருக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் சங்கர மடத்தின் மேலாளா் ந.ராமமூா்த்தி மற்றும் வேத ஸம்ரக்ஷண அறக்கட்டளை நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

