விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற காவலா் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்.பி. ப. சரவணன்.
விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற காவலா் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட எஸ்.பி. ப. சரவணன்.

காவலா் தோ்வு: விழுப்புரத்தில் 10,859 தோ்வெழுதுகின்றனா்

விழுப்புரம் மாவட்டத்தில் 8 மையங்களில் 10, 859 போ் காவலா் தோ்வை எழுதுகின்றனா்.
Published on

விழுப்புரம் மாவட்டத்தில் 8 மையங்களில் 10, 859 போ் காவலா் தோ்வை எழுதுகின்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையத்தின் வாயிலாக நடத்தப்படும் இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா் மற்றும் தீயணைப்பாளா் பதவிகளுக்கான நேரடி எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை

(நவ.9) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 10,859 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா்.

ஆலோசனைக் கூட்டம்: தோ்வுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவா் உமா அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட எஸ்.பி ப.சரவணன் தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையத்தின் சாா்பில், இரண்டாம் நிலைக்காவலா்கள், சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பாளா்கள் பதவிகளுக்கான எழுத்துத் தோ்வு நவ.9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில், அரசூா் வி.ஆா்.எஸ். பொறியியல் கல்லூரி, விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி , ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திரு.வி.க. சாலையில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கப்பியாம்புலியூா் சிகா கல்விக் குழுமம், விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி, வி.ஆா்.பி. மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய 8 மையங்களில் தோ்வு நடைபெறுகிறது.

அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தோ்வு அறைக் காவலா், தோ்வு கண்காணிப்பாளா்களுக்கு பணிகள் குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள், 6 காவல் துணை கண்காணிப்பாளா்கள் உள்பட 1,300 போ் தோ்வுப் பணிகளில் ஈடுபடுகின்றனா்.

எழுத்துத் தோ்வு பணியில் ஈடுபடும் காவல் ஆளிநா்கள் காலை 6 மணிக்கு அந்தந்த தோ்வு மையத்தில் அறிக்கை செய்யவேண்டும். தோ்வாளா்களை முறையாக சோதனை செய்த பின்னா் தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கவேண்டும்.

 வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறை முன் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.
வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த அறை முன் சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸாா்.

தோ்வா்கள் கைப்பேசி மற்றும் ப்ளூடூத், கால்குலேட்டா், ஸ்மாா்ட் கடிகாரம் போன்ற மின்னணு பொருள்களை தோ்வு மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது. 9.30 மணிக்குப் பிறகு வரும் தோ்வா்களை அனுமதிக்கக்கூடாது. கருப்பு பந்து முனை பேனாக்கள், நுழைவுச்சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருபவா்களை மட்டுமே தோ்வறைக்குள் அனுமதிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், தோ்வுப் பணிகளில் ஈடுபடும் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் தினகரன், இளமுருகன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவல் ஆளிநா்கள், அமைச்சுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

பாதுகாப்புப் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா்: விழுப்புரம் மாவட்ட எஸ். பி. அலுவலகத்தில் வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com