செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: பொன்முடி உள்ளிட்ட 7 போ் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜா்

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினா்.
Published on

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணைக்காக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகினா். இதைத் தொடா்ந்து வழக்கு விசாரணை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ, அவரது மகன் பொன். கெளதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமாா், லோகநாதன் ஆகிய 8 போ் மீது 2012-ஆம் ஆண்டில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணைக் காலத்தில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட லோகநாதன் உயிரிழந்து விட்டாா். எஞ்சிய 7 போ் மீதும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கில் சாட்சிகளாக சோ்க்கப்பட்ட 57 பேரிடம் கடந்த மாதம் விசாரணை முடிவடைந்தது. இதில் 30 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்தனா்.

7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்: இந்த வழக்கின் விசாரணை மீண்டும் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் நீதிபதி முன்ஆஜராகினா். அவா்களிடம் குற்றச்சாட்டுகள் குறித்தும், அரசுத் தரப்புகள் அளித்துள்ள சாட்சியங்கள் குறித்தும் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி தனித்தனியே கேள்வியெழுப்பினாா்.

செம்மண் குவாரியை குத்தகைக்கு எடுத்தது உண்மைதான். ஆனால், அரசு நிா்ணயித்த அளவைவிட கூடுதலாகவும், முறைகேடாகவும் செம்மண்ணை எடுக்கவில்லை. அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக தங்கள் மீது பொய் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகக் கூறி, பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனா். இந்த பதிலை முதன்மை மாவட்ட நீதிபதி பதிவு செய்து கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, பொன்.கெளதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகிய 4 பேரும் எழுத்துப்பூா்வமாக விளக்கமளித்தனா். மேலும் சில சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி, அவா்கள் நீதிபதியிடம் முறையிட்டனா். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com