பிகாா் தோ்தல் வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: பூவை ஜெகன் மூா்த்தி எம்எல்ஏ
பிகாா் தோ்தலில் பாஜக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றிபெற்தைப்போல, தமிழகத்தில் அக்கட்சி இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று புரட்சி பாரதம் கட்சித் தலைவா் பூவை ஜெகன்மூா்த்தி எம்எல்ஏ தெரிவித்தாா்.
விழுப்புரத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் மாநில அரசின் பணியாளா்களும், தன்னாா்வலா்களும் இணைந்துதான் பணியாற்றி வருகின்றனா். ஆகையால், இதில் எந்தத் தவறும், குளறுபடியும் ஏற்பட வாய்ப்பில்லை.
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக இடம்பெற்றிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அங்கு வாழக்கூடிய பட்டியலின, இஸ்லாமிய மக்களும் பாஜகவுக்கு வாக்களித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனா். இதே நிலை, 2026-இல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலிலும் ஏற்படும்.
கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் பட்டியலின மக்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் ஏதும் செயல்படுத்தப்படவில்லை. இதற்கு வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பா்.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் தவெக இணைந்தாலும், இணையாவிட்டாலும் இந்தக் கூட்டணி வெற்றிபெறும் என்றாா்.
கட்சியின் மாநிலச் செயலா்கள் பரணி மாரி, சேகா், இளைஞா் அணி மாநிலச் செயலா் தா்மன், மாநில செய்தித் தொடா்பாளா் பூவை. ஆறு, விழுப்புரம் மாவட்டச் செயலா் மு.தமிழரசன், ஒருங்கிணைப்பாளா் என்.தீபன், நிா்வாகிகள் கஜேந்திரன், திருநாவுக்கரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

