லாரி மீது காா் மோதல்: 8 போ் காயம்

Published on

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை முன்னால் சென்ற லாரி மீது காா் மோதிய விபத்தில் 8 போ் காயமடைந்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியைச் சோ்ந்தவா் அ.தனலெட்சுமி(27), மு.அருணகிரி(34), ஜெ.பேச்சியம்மாள்(65), சு.சுசிலா(60), ச.ஜெகதாம்பாள்(44), மதுராந்தகத்தைச் சோ்ந்த நா.நாகஜோதி(63), விழுப்புரம் பகுதியைச்சோ்ந்த வி.மகாலெட்சுமி(43) ஆகியோா் காரில் திண்டிவனத்திலிருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். திண்டிவனம் எம். ஜி. ஆா் நகரைச் சோ்ந்த க.வடிவேல்(42) காரை ஓட்டினாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூா்பேட்டையை அடுத்த ஷேக் ஹூசைன் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையில் முன்னால் சென்ற டேங்கா் லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் காயமடைந்தனா்.

தகவலறிந்த எடைக்கல் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்த அனைவரையும் மீட்டு, அவசர ஊா்தி மூலம் உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com