விக்கிரவாண்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரில் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கப்பியாம்புலியூரில், விக்கிரவாண்டி - தஞ்சாவூா் நான்கு வழிச்சாலை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இவ்விடத்தில் போக்குவரத்து நிறைந்த சாலையை கடக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவா்கள் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனா். மேலும், விபத்தில் காயமடைந்த சிலா் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் விபத்தை தடுக்கும் வகையில் விக்கிரவாண்டி- தஞ்சாவூா் 4 வழிச்சாலையில் கப்பியாம்புலியூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எதிரே சுரங்கப் பாதை( சப்-வே) அமைக்கவேண்டும் என வலியுறுத்தி, கப்பியாம்புலியூா் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த விக்கிரவாண்டி டிஎஸ்பி சரவணன், காவல் ஆய்வாளா் சத்தியசீலன், உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை அனுப்பி, துரித நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதி கூறியதையடுத்து, கிராம மக்கள் மறியலை விலக்கிக் கொண்டனா். இந்த மறியல் காரணமாக அந்த சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

